உறவுகளுக்கு நினைவூட்டல்...
"ஒண்டிவீரன் களஞ்சியம்"
அறிவிப்பு :
“வரலாறு என்பது இறந்த காலத்தின் கதை அது நிகழ்காலத்தைப் புரிந்து கொள்வதற்கும், எதிர்காலத்தைப் பற்றிக் கணிப்பதற்கும் உதவுகிறது”. வரலாற்றை இறந்த காலத்தின் ஒட்டுமொத்த நினைவாகவும், அது நமது இன்றைய நிலையை எவ்வாறு வடிவமைத்தது எனவும் புரிந்துகொள்வது அவசியம்.
சமூக வரலாறு என்பது மக்களை, நிகழ்வுகளை, இடங்களை, பொருட்களை, கருத்தாக்கங்களை நினைவு கூர்வதற்கு உதவிசெய்கிறது. மேலும் சமூக வரலாறு என்பது வரலாற்றைப் பதிவு செய்யப் பல்வேறு உத்திகளைக் கையாள்கிறது. வாய்மொழி வரலாறு, செவி வழி வரலாறு, உணவு, உடை, இசை, இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, நாட்டார் வழக்காறுகள் போன்றவற்றின் மூலமாக சமூக வரலாறு கட்டமைக்கப்படுகிறது. எனவே சமூக வரலாறு என்பது ஒரு சமூகத்தின் பல்வேறு வண்ணமயமான கூறுகளை உள்ளடக்கியதாக அமைகிறது. ஏற்கனவே எழுதப்பட்ட சமூக வரலாறு என்பது பெரும்பாலும் அரசர் மற்றும் ஆதிக்க இனத் தலைவர்களின் வரலாறாகவே இருக்கிறது. தற்பொழுது எழுத்து வடிவில் இருக்கும் வரலாறு மிகுதியும் மேல்தட்டு வர்க்கத்தினரால் எழுதப்பட்டிருப்பதுடன் மேட்டிமைப் பார்வையுடன் / அணுகலுடன் எழுதப்பட்டுள்ளது. எழுதப்பட்ட வரலாற்றிலும் தமிழக ‘அருந்ததியர்’/ 'சக்கிலியர்' வரலாறு அதிகமாக இடம்பெறவில்லை. ஆனால் அருந்ததிய / சக்கிலிய சமூக மக்களுக்கென்று கௌரவமான கடந்த காலமும் தனித்ததொரு நீண்ட வரலாறும் இருந்திருக்கிறது. அது திட்டமிட்டே எழுதப்படாமல் / பதிவுசெய்யப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் வரலாற்றைக் கீழிருந்து (History from below) எழுதவேண்டும் என்று வரலாற்று அறிஞர்களும் சமூகவியல் அறிஞர்களும் கூறிவருகின்றனர். உலகத்திலுள்ள ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட இனத்தைப் பற்றி சமூக மானிடவியல், இனவரலாறு மற்றும் வழக்காற்றியல் ஆய்வுகள் நிகழ்த்தவேண்டியது இக்காலகட்டத்தின் மிகத் தேவையான ஒன்றாக உள்ளது. அந்த அடிப்படையில் நிகழ்கால சமூக வரலாற்றுப் பின்னணியில் அருந்ததிய / சக்கிலிய சமூகத்தைச் சேர்ந்த "ஒண்டிவீரன்" குறித்த சமூக-வரலாற்றுத் தகவல்களை ஆவணப்படுத்த வேண்டிய தருணம் இது.
ஒண்டிவீரன் குறித்த அரிய தகவல்கள், புகைப்படங்கள், வரலாற்றுத் தகவல்கள் , ஆய்வுக் கட்டுரைகள், நாடகங்கள், வில்லுப்பாட்டுகள், கதைப்பாடல்கள், வாய்மொழிக் கதைகள், நாட்டுப்புறப்பாடல்கள்-கதைகள் முதலான வடிவங்களைச் சேகரித்து "ஒண்டிவீரன் : களஞ்சியம் "என்ற தொகுப்பு நூலாக அவரது நினைவு நாளான ஆகஸ்டு 20-ல் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஒண்டிவீரன் வரலாற்றினை ஆவணப்படுத்துவதில் ஈடுபாடும், சமூக அக்கறையும், ஆய்வு நோக்கும் கொண்டுள்ள ஆர்வலர்கள், நண்பர்கள், மேற்குறித்த தகவல்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு விரைந்து அனுப்பி உதவுமாறு வேணடிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவலாளர்கள், கட்டுரையாளர்கள் குறித்த விபரங்கள் அங்கீகரிக்கப்பட்டுத் தொகுப்பு நூலில் முறைப்படி பதிவு செய்யப்படும்.
நன்றி !
தொடர்புக்கு:
1. Dr.S.Seenivasan
Associate Professor of Tamil
Sri Venkateswara College, (University of Delhi)
New Delhi-110 021
Mob. No. : 99112-23484. Mail id: drseenivasan@gmail.com.
No comments:
Post a Comment