Sunday, July 26, 2020

ஜெய்பீம், ஜெய்புத்தம்

ஜெய்பீம், 

இந்துமதம் என்கின்ற இரும்புக்கோட்டையை அறிவாயுதம் கொண்டு, உடைத்து சுக்குநூறாக்கிய அறிவுலகமேதை நமது இரட்சகர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள்!!!

பெளத்ததை அழித்தொழிக்க பிராமணர்கள் கர்மகாண்டம், ஞானகாண்டம் என்ற கருதுகோள்களை (concepts) பயன்படுத்தி பெளத்தத்தை நிரந்தரமாக அழிப்பதற்காக பிராமணர்கள் உருவாக்கிய கருதுகோள்களை அறிவுப்பூர்வமாக ஆய்துணர்ந்து, அவைகளைத் தோலுரித்த பாபாசாகேப் அம்பேத்கர்.

 பெளத்த மதத்தின் அழிவிற்கு பிராமணியமே காரணமாக இருந்தது என்று பாபாசாகேப் அவர்கள் "பெளத்த சமயத்தின் நலிவும் வீழ்ச்சியும்" என்ற கட்டுரையிலும் இதற்கான காரணங்கள் என்ன என்பதை பிராமணிய இலக்கியங்கள் என்ற கட்டுரையிலும் மிகவிரிவாக எடுத்துரைக்கின்றார்..
ஆதாரம்: டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் நூலின் தமிழ் தொகுதி 7 - பக்கம் 117.

சாமவேத பிராமணன் புஷ்யமித்ரசுங்கன் மெளரிய வம்சத்தின் அரசனான பிருகதாரியனை படுகொலைச் செய்துவிட்டு அரசியல் ரீதியாக சுங்கவம்சத்தை நிறுவியப் பிறகு பெளத்ததை அழிக்கவே உருவாக்கப்பட்டது பிராமணிய இலக்கியங்கள். அத்தகைய பிராமணிய இலக்கியத்தை ஆறு பிரிவுகளில் உள்ளடக்குகின்றார் பாபாசாகேப் அவர்கள். அவைகள் முறையே
1. மனுஸ்மிருதி
2. பகவத்கீதை
3. சங்கராச்சாரியாரின் வேதாந்த சூத்திரம்
4. மகாபாரதம்
5. இராமாயணம் மற்றும்
6. புராணங்கள்.
பிராமணிய இலக்கியங்களுக்கு முன்னோடியாக இருப்பவைகள்- வேதங்கள், பிரமாணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிஷத்துகள். சொல்லுகின்றச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பிரிவுகளாக இவைகளைப் பிரித்தனர். பாபாசாகேப் அவர்கள், மேலும் சொல்லுகின்றார்- ஒரு பிரிவு, மத அனுஷ்டானங்கள், சடங்குகள், சம்பரதாயங்களைப் பற்றி எடுத்துரைத்தது, அதற்கு "கர்மகாண்டம்" என்று பெயர். மற்றொன்று கடவுளைப் பற்றிய அறிவைப் பற்றி எடுத்துரைப்பது, அதற்கு "ஞானகாண்டம்" என்று பெயர். "கர்ம காண்டம்" இரண்டு பிரிவுகளை கொண்டது. 
(1) பூர்வ மீமாம்சம்
 (2) உத்தர மீமாம்சம்.
பூர்வ மீமாம்சம் வேதங்களையும், பிராமணங்களைப் பற்றிப் பேசுவது, உத்தர மீமாம்சம் ஆரண்யங்களையும், உபநிஷங்களையும் பேசுவது.

"கர்மகாண்டத்தின்" ஆசிரியராக கருதப்படுபவர் "ஜெய்மினி" என்பவர்.  ஞானகாண்டத்தின் ஆசிரியராக கருதப்படுபவர் "பாதராயணர்". பிராமணர்கள் ஞான காண்டத்தைப் பற்றி கவலைபடுவதில்லை. பிராமணர்கள் வாழ்நிலை, அவர்களின் இருப்பு, வேத இலக்கியத்தின் பகுதியை கர்மகாண்டமாக கட்டமைப்பதிலேயே இருக்கின்றது. ஆம், பாபாசாகேப் அவர்கள் சொல்வதை ஆழமாகச் சிந்தித்து பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். மதச் சடங்குகளை, மத அனுஷ்டானங்களை, மதப்பழக்கவழக்கங்களை, மத சம்பரதாயங்களை கர்ம காண்டமாக வடிவமைத்து பின்பற்றி வருவதற்கான கருவிகளாக பிராமணிய இலக்கியங்கள் இருந்து வந்திருக்கின்றன! டாக்டர் பாபாசாகேப் அவர்களின் தமிழ் நூல் தொகுதி 7, பக்கம் 130-131.

பாபாசாகேப் அவர்களின் நூல் தொகுப்பு 7 பக்கம் 159-255: பிராமணியத்தின் வெற்றி(இயல் 7) மன்னன் கொலை அல்லது எதிர்ப்புரட்சியின் தோற்றம் என்றொரு ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகளை தங்களின் பார்வைக்கு கொண்டு வருகின்றோம்! மெளரியப் பேரரசின் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த ஒப்பில்லா மாமன்னர் அசோகர் அவர்களின் ஆட்சிகாலத்தில்,
1. பிராமணர்கள் அரசின் ஆதரவை இழந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்கள்,
2. அசோகர் பிராமண மதத்தின் உயர் அம்சமான உயிர்பலிகள் அனைத்தையும் தடை செய்தார்,
3. யாகம் நடத்துவதே பிராமணர்களின் முக்கியத்தொழில், இதற்கு தட்சயணையாக பிராமணர்கள் பொருள் பெற்றுக்கொண்டார்கள், இது பலசமயங்களில் கணிசமாக இருந்தது. இதுவே இவர்களின் வாழ்க்கைக்கு முக்கிய ஆதாரமாக இருந்தது. ஆனால், மாமன்னர் அசோகர் அவர்களின் காலத்திலிருந்து, யாகங்கள் நடத்தும் தொழிலை இழந்து சுமார் 140 ஆண்டுகளாக  ஒடுக்கப்பட்ட மக்களாக பிராமணர்கள் வாழ்க்கை நடத்தினார்கள். அதனால் வெகுண்டெழுந்த பிராமணர்கள் பெளத்தத்தை முடிவுக்குக்கொண்டு வருவதற்கு முயற்சி செய்து மெளரிய ஆட்சியை எதிர்த்து புஷ்யமித்ரசுங்கன் புரட்சி செய்தான். அவன் கங்ககோத்திரத்தைச் சார்ந்த சாமவேத பிராமணன். அவனுடைய நோக்கம் புத்தமதத்தை அழித்தொழித்து பிராமண மதத்தை நிறுவுவது! புஷ்யமித்ரனின் பிராமணிய புரட்சி கி.மு 185ல் நடந்தது என்பதை நினைவில் கொண்டால், மனுஸ்மிருதி என்ற தொகுப்பு மெளரியர்களின் புத்தமத அரசுக்கு எதிரான பிராமணிய புரட்சியின் கோட்பாடுகளை எடுத்துக் கூறுவதற்காக புஷ்யமித்ரனால் பிரகடனம் செய்யப்பட்டது. பிராமணிய சட்டத்தொகுப்பாக மனுஸ்மிருதி உள்ளது. புஷ்யமித்ரனின் புரட்சி என்பது முற்றிலும் ஒரு தனிமனித வீரச்செயல் அல்ல என்பது நிருபணமாக மனுஸ்மிருதி உள்ளது.

மனுஸ்மிருதியின் உள்ளடக்கம்:-
1. ஆட்சி செய்வதற்கும், மன்னனைக் கொள்வதற்கும் பிராமணனுக்கு உரிமை உண்டு என்பதை அது(மனுஸ்மிருதி) நிலைநிறுத்தியது!
2. பிராமணர்களை தனி சலுகைகள் பெற்ற ஒரு வகுப்பாக அது ஆக்கியது.
3. மனுஸ்மிருதி வர்ணத்தை சாதியாக மாற்றியது.
4. வெவ்வேறு சாதிகளிடையே போராட்டங்களையும் சமூக விரோத உணர்வுகளையும் அது உருவாக்கியது.
5. அது சூத்திரர்களையும், பெண்களையும் தாழ்ந்த நிலைக்கு தள்ளியது
6. படிப்படியான ஏற்றத்தாழ்வு முறையை (Graded inequality) அது தோற்றுவித்தது.
7. மரபு ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாகவும், நெளிவு சுளிவானதாகவும் இருந்த சமூக அமைப்பை அது மாற்றி, மனுதர்மச் சட்டத்துக்கு உட்பட்டதாகவும், கடுமையாகவும் ஆக்கியது...

பாபாசாகேப் அம்பேத்கர் தமிழ் நூல் தொகுதி 7 இயல் 9:- பக்கம் 298-299: 
பகவத்கீதைப்பற்றி கட்டுரைகள் "எதிர்ப் புரட்சிக்கு தத்துவ அடிப்படையில் பாதுகாப்பு- கிருஷ்ணனும் கீதையும்"  என்ற கட்டுரையில் குறிப்பிடுவதாவது..
1. பகவத் கீதையில் முதன்மையாகக் காணப்படுவது போரை நியாயப்படுத்தும் நிகழ்ச்சி.
2. நான்கு வர்ண கோட்பாட்டிற்கு தத்துவ ரீதியான பாதுகாப்பு அளிப்பது
3. கர்மகாண்டம்:
அத்தியாயம் 4 வசனம் 13:- பகவத்கீதை
மோட்சம் அடைவதற்கு வேள்விகள் போன்ற சமயவினை முறைகளை மேற்க் கொள்வதே ஆகும்(Performance of observances such as yanas as a way to salvation)-
Bible of Counter Revolution namely "Jaimini's; Poorva Meemamsa Religion Acts and Observances.
4. அணாசக்தி யோகம்: பகவத்கீதை அத்தியாயம் 3 வசனம் 26: பலனை எதிர்பார்க்காதே காரியத்தை செய்(எந்த காரியம் என்பது, பெளத்தத்தை ஒழிப்பதற்காகவும், பிராமணிய மதமான இந்து மதத்தை வளர்ப்பதற்காகவும் பகவத்கீதை உருவாக்கப்பட்டது)

பகவத்கீதை, அத்தியாயம் 18, வசனம் 41 முதல் 48 வரை:- நான்கு வர்ணங்களை மீறக்கூடாது என்பதாகும். கீதை எதிர்ப்புரட்சியை உயிர்ப்பித்தது, எதிர்புரட்சி இன்றுவரை வாழ்கின்றது என்றால் பகவத்கீதை அளித்தத் தத்துவப்பாதுகாப்பே என்று பாபாசாகேப் அவர்கள் உணர்த்துகின்றார்!

பக்கம் 300 ல் பாபாசாகேப் அவர்கள் மேலும் தொடர்கின்றார், "சமய வினைகளையும், விரதங்களைப் பற்றியே பகவத்கீதை சொல்கின்றது என்பதைப் படித்தவர்கள் எவராலும் மறுக்க முடியாது. அற்ப விசயங்களைப் பற்றிக் கூறும் கட்சி பிரச்சார அறிக்கையின் நிலையிலிருந்து கீதையை தூக்கிப்பிடித்து, தத்துவரீதியான உயர்பொதுக் கோட்பாடுகளைப் பற்றிய ஆய்வு நூல் என்ற மதிப்பினை அதற்கு அளிக்க வேண்டுமென்பதற்காக கர்மம், ஞானம் ஆகிய சொற்களுக்கு பரந்து விரிந்த பொருள் கூற முயல்கின்றனர். இந்திய தேச பக்தர்கள் செய்த இத்தகைய தந்திரங்களுக்கு திலகரையே குறைசொல்ல வேண்டியிருக்கின்றது"

"ஜெய்மினி" கர்ம காண்டத்தில் விவரித்துள்ள கோட்பாடுகளையே கீதையும் பேசுகின்றது என்று பாபாசாகேப் அவர்கள் கூறுகின்றார்.

அதேபோல் வேதாந்த சூத்திரங்கள் என்பது, வேதங்களின் இறுதி பகுதிக்கு விளக்கம் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. வேதாந்தம் என்ற சொல்லுக்கு வேதத்தின் முடிவு என்பது பொருள் (வேதம்+அந்தம்) உபநிஷத்துக்களை உள்ளடக்கிய வேதங்களின் இறுதி அத்தியாயத்தில் வகுத்துத்தரப்பட்ட சித்தாந்தங்கள் என்றும் இவற்றை கூறலாம். வேதங்களை முறைப்படுத்தி ஒருங்கிணைக்கும் பாதராயணரின் சூத்திரங்களை வேதாந்த சூத்திரங்கள் என்கின்றோம். (பக்கம் 132).  இவருடைய சூத்திரங்கள் கடவுள் பற்றியும், ஆன்மாவைப் பற்றியும் பேசுகின்ற சூத்திரங்கள் இவற்றையே நாம் ஞானகாண்டம் என்கின்றோம். வேதாந்த சூத்திரங்களுக்கு விளக்கம் அளிப்பவர்களை பாஷ்யக்காரர்கள் என அழைப்பார்கள். வேத இலக்கியங்கள் எண்ணிக்கையில் மிக அதிகமாக உருவாக்கப்பட்டதால் அதற்கு விளக்கம் கூறும்முறை உருவாக்கப்பட்டது. இந்த வேதாந்த சூத்திரத்திற்கு ஐந்து விதமான உரைகள் எழுதப்பட்டுள்ளன.
1. சங்கராச்சாரியார் (கி.பி. 788-820)
2.இராமானுஜாச்சாரியார் (கி.பி. 1017-1137)
3.நிம்பாச்சாரியார் கி.பி 1062 ல் இறந்துவிட்டார்
4. மத்துவாச்சாரியார் கி.பி. 1197 - 1276
5. வல்லபாச்சாரியார் கி.பி.1417 ல் பிறந்தார்.

ஒரே சூத்திரத்திற்கு இந்த ஐந்து பேரும் ஐந்து விதமான கருத்துகளை எழுதினார்கள்...
சங்கராச்சாரியார் வேதாந்த சூத்திரங்கள் அத்வைதத்தையே போதிக்கின்றது என்றார்(உடல் வேறு, உயிர் வேறு அல்ல- இரண்டும் ஒன்றே என்றார்)

இராமானுஜாச்சாரியார் விசிஷ்டாத்வைத்தமே வேத சூத்திரங்களின் சாரம் என்றார்.

நிம்பாச்சாரியார் வேத சூத்திரங்கள் சுத்தாத்வைத்தையே போற்றுகின்றன என்றார்.

மத்துவாச்சாரியார் இவர்களிடமிருந்து மாறுபட்டு வேத சூத்திரங்கள் துவைத்ததையேப் போற்றுகின்றது என்றார்.

வல்லபாச்சாரியாரோ துவைதா அத்வைத்தையே போற்றுகின்றார்.

இந்த வேதாந்த சூத்திரங்களில் புத்த மதத்தைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன, இதனால் புத்தமதம் வந்தப் பிறகுத்தான் இவை எழுதப்பட்டது என்பது தெளிவாகின்றது. (பக்கம் 134-135 பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் தமிழ் நூல் தொகுப்பு 7)

மகாபாரதம் என்பது  மூன்று முறை மூலத்திலிருந்து திருத்தி எழுதப்பட்டுள்ளது. அவ்வாறு எழுதிய ஒவ்வொரு ஆசிரியரும் அதன் தலைப்பு மற்றும் கருப்பொருள் ஆகியவற்றை அவர்களின் விருப்பம் போல மாற்றியுள்ளனர். அதன் மூல தலைப்பு "ஜெயம்" என்பதாகும். ஜெயம் என்பதன் பொருள் "வெற்றி"....

"ஜெயம்" என்ற தலைப்பு கொண்ட மூலப் பதிப்பை வியாசர் ஒருவர் எழுதியதாக கூறப்பட்டுள்ளது. அதன் இரண்டாவது பதிப்பில் இதன் தலைப்பு "பாரதம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இந்த இரண்டாவது பதிப்பை எழுதியவர் 'வைசம்பாயானர்' என்று அறிகின்றோம்.....
சவுதி எழுதிய பாரதம் மகாபாரதம் எனப்பட்டது. இந்த நூல் அளவிலும் கருப்பொருளிலும் பல்கிப் பெருகி மிகப்பெரிதாக வெளிவந்தது, வியாசர் எழுதிய ஜெயம் என்ற நூல் மிகவும் சிறியது, இதில் 8800 க்கும் குறைந்தப் பாடல்களே உள்ளன, வைசம்பாயானர் எழுதிய பாரதத்தில் 24000 பாடல்களாக பெருகியது. சவுதி இதனை மேலும் விரிவாக்கி 96836 பாடல்களாக எழுதினார். வியாசர் எழுதிய ஜெயம் என்ற மூல நூல் கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடந்த போரைப் பற்றிக் கூறும் சிறிய கதையாகும். இதுவே வைசம்பாயானர் கைகளுக்கு மாறி இரண்டு மடங்காக விரிவடைந்தது.  மூல கதையோடு பல்வேறு உபதேசங்கள் இடம்பெற்று விட்டன. சாதாரண வரலாற்று நூலாக எழுதப்பட்ட இது சமூக, தார்மீக, சமய கோட்பாடுகளைப் போதிக்கும் ஒரு கட்டளை நூலாக வடிவெடுத்தது. கடைசியாக எழுதிய சவுதி இதோடு பல தொல் கதைகளை இணைத்து வெளியிட்டார். இவ்வாறு ஆங்காங்கே பல்வேறு கதைகளை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே போவதால் மகாபாரதமாக மாறியதில் வியப்பேதுமில்லை (பக்கம் 135-136)

அதன்பிறகு பாபாசாகேப் அவர்கள் மகாபாரதத்தில் ஹுனர்களைப் பற்றிய குறிப்புகளையும், கோசாம்பி அவர்களின் குறிப்புகளையும் மற்றும் யதிகா என்ற சொல்லைப்பற்றியும் அதன் பொருள் பற்றியும் ஆய்ந்து, மகாபாரதம் கி.பி 1200 வரை எழுதி முடிக்கப்படவில்லை என்பதை பாபாசாகேப் அவர்கள் தெளிவாக விளக்குகின்றார். அதேப்போல் இராமாயணத்தை எழுதிய காலமும், மகாபாரதத்தை எழுதிய காலமும் ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும். இராமாயணத்தில் உள்ள சில பகுதிகள் மட்டும் மகாபாரதத்திற்கு முற்பட்டதாக இருக்கலாம், ஆனால் மகாபாரதத்தின் பெரும்பகுதி எழுதி முடித்தப்பிறகுதான், இராமாணயத்தின் பெரும்பகுதியும் எழுதப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. (பக்கம் 140).

புராணங்கள் மொத்தம் பதினெட்டு, புராணங்களின் மூலவராக வியாசர் கருதப்படுகின்றார். அவர்தான் தொடக்கத்திலிருந்த ஒரே ஒரு புராணத்தை செப்பம் செய்து புதியவற்றை சேர்த்து 18 புராணங்களாக்கினார் என்று கூறப்படுகின்றது. இந்தப்புராணங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நபர்களால் தொகுக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு பதிப்பாக உருவெடுத்து நான்கு பதிப்புக்களாக வெளிவந்தது. எனக்குத் தெரிந்தவரையில் ஹசாரா என்பவர் ஒருவர்தான் புராணங்களின் காலத்தை கணக்கிட முயற்சி எடுத்துள்ளார். இந்த பதினெட்டு புராணங்களும் கி.பி.100 லிருந்து கி.பி. 1500 க்குள் பல்வேறு காலக்கட்டத்தில் தொகுக்கப்பட்டுள்ளதாக 'ஹசாரா' என்பவர் கணித்துள்ளார். இந்தப் புராணங்கள் ஸ்மிர்தி தர்மத்தைப் பற்றியும், விரத தர்மத்தைப் பற்றியும், க்ஷேத்திர தர்மத்தைப்பற்றியும், தான தர்மத்தைப் பற்றியும் கூறுகின்றன. முதலில் இந்தப் புராணங்கள் சூதர்கள் என்பவர்களிடமிருந்தது, பின்னர் இவைகள் பிராமணர்களின் கைகளுக்கு மாறியது.

 ஹசாராவின் கணக்குப்படி புராணங்களின் காலக்கணிப்பு:-
1. மார்கண்டேய புராணம் கிபி 200-500
2. வாயு புராணம் 
கிபி 200-500
3. பிரமாணந்த புராணம் கிபி 200-500
4. விஷ்ணு புராணம் கிபி 100 -350
5. மச்சய புராணம் ஒரு பகுதி கிபி 325, மற்றொரு பகுதி கிபி 1100
6. பாகவத புராணம் கிபி 500-600
7. கூர்ம புராணம் கிபி 550-1000
8. வாமன புராணம் கிபி 700-800
9. லிங்க புராணம் கிபி 600-1000
10. வராகப் புராணம் கிபி 800-1500
11. பத்ம புராணம் கிபி 600-950
12. பிரேஹநாரதிய புராணம் கிபி 875-1000 
13. அக்னி புராணம் கிபி 800-900
14. கருட புராணம் கிபி 850-1000
15. பிரம்ம புராணம் கிபி 900-1000
16. ஸ்கந்த புராணம் கிபி 700 பிறகு
17. பிரம்ம வைவரதப் புராணம் கிபி 700 பிறகு
18. பவிஷ்ய புராணம் கிபி 500 பிறகு.          (பக் 144-145)
இந்தப் புராணங்கள் எல்லாம் புஷ்யமித்ரசுங்கன் மற்றும் அவனுக்குப் பின்வந்த வழித்தோன்றல்களால் பெளத்ததை அழிப்பதற்காக பிற்காலங்களில் ஏற்படுத்தியதாக பாபாசாகேப் அவர்கள் தெளிவாக விளக்குகின்றார்.

பெளத்தம் என்பது கடவுளோடும் ஆன்மாவோடும் தொடர்பில்லாதது, அதேபோல் மனிதன் இறந்தபிறகு இருப்பதாகச் சொல்லப்படும் சொர்கம் நரகம் போன்றவைகளோடு தொடர்பில்லாதது, சடங்கு சம்பரதாயங்களோடு தொடர்பில்லாதது, பெளத்ததின் மையக்கரு ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்குமான உறவை எடுத்துரைப்பதாகும், இதையே வேறு வார்த்தையில் சொன்னால், இந்தப் பூமியில் உள்ள மனிதர்களுக்கிடையே ஆன உறவுகளைப் பற்றியும், அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளைப் பற்றிய வாழ்வியலை எடுத்துரைக்கும் தத்துவமே பெளத்தம்.

பெளத்தத்தின் மையம் சரியான புரிதலைச் சார்ந்திருக்கின்றது.  இந்த சரியான ஒழுங்குமுறைத் தவறுகின்றப்போது அது குடும்பமானாலும், அமைப்பானாலும், சமுகமானாலும், நாடானாலும், அரசியலானாலும்- எதுவாக இருந்தாலும் சிக்கலுக்கு உள்ளாக்கும், துன்பத்தில் ஆழ்ந்திட நேரிடும், அதற்காகத்தான் பகவன் புத்தர் அவர்கள் பஞ்சசீலம், என்வழிப்பாதை, தச சீலம் முதலியவற்றை உள்ளடக்கி- அதனடிப்படையில் மத்திம பாதையை உருவாக்கினார். (புத்தரும் அவர் தம்மமும் தமிழில் ஆதிபகவன் பதிப்பகம்- பக்கம் 111-121)

இதன் அடிப்படையில் வாழ்ந்த பெளத்த சமூகத்தை அழிப்பதற்காக புஷ்யமித்ரசுங்கனால் எதிர்புரட்சி செய்யப்பட்டு, பிராமணியம் மீண்டும் வெற்றிகண்டு, பிராமணியத்தையே அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காக, இல்லாத கடவுளோடும், இல்லாத ஆன்மாவோடும் மக்களை தொடர்புப்படுத்தி அதற்கு ஞானகாண்டம் என்று பெயர் உருவாக்கி திட்டமிட்டு இன்றுவரையில் மக்களை- கடவுள் பயத்திலும், ஆன்மா பயத்திலும் ஆழ்த்தி வைத்துள்ளனர்! அதேப்போல மதச் சடங்குகள், மத அனுஷ்டானங்கள், மத சம்பரதாயங்கள்  போன்றவற்றை உருவாக்கி அதைத் தொடர்ந்து நடத்துவதற்காக பிறப்பிலிருந்து இறப்புவரை ஏதாவது சடங்கு சம்பரதாயம் செய்யச் சொல்லி வலியுறுத்தி மக்களை ஏமாற்றி, அதற்கு கர்மகாண்டம் என பெயரிட்டு, இன்றுவரையில் நம்மக்கள் அதற்கு தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.

இந்த பிராமணிய மதம் என்றுச் சொல்லப்படுகின்ற இந்து மதத்தின் உயிர்- கர்மகாண்டத்திலும் ஞானகாண்டத்திலும் உள்ளது. இந்த கர்ம காண்டத்தையும், ஞான காண்டத்தையும் பாதுகாத்து படிப்படியிலான ஏற்றத்தாழ்வு (graded inequality) உள்ள ஒரு சமூகத்தை அமைத்து கார் உள்ளளவும், கடல் உள்ளளவும் நம் சமூகத்தை நிரந்தரமாக இழிவுக்குள்ளாக்கி அடைத்து வைப்பதற்காகவே கர்ம மற்றும் ஞான காண்டம் உருவாக்கப்பட்டு, அதை போதிக்கவே மனுஸ்மிருதி, பகவத்கீதை, வேதாந்த சூத்திரங்கள், மகாபாரதம், இராமாயணம் மற்றும் புராணங்கள் போன்றவற்றை உருவாக்கி, நம் எல்லோரையும் அதற்குள் சிக்கித்தவித்து வெளிவர முடியாமல் தடுக்கப்பட்டுள்ளதற்கு காரணம் பிராமணியமே!
 நம் இழிநிலைக்கு காரணம் பிராமணியமே!! 
நம் அடிமைத்தனத்திற்கு காரணம் பிராமணியமே!!!

அத்தகைய பிராமணியத்தை தூக்கி பிடிக்கின்ற மேற்ச் சொல்லப்பட்ட அனைத்து நூல்களையும் அறுபது அடி ஆழக் குழித்தோண்டி புதைத்துவிட்டோ அல்லது கடலில் தூக்கி எரிந்துவிட்டோ அல்லது தியிட்டு பொசுக்கி விட்டோ- பாபாசாகேப் அவர்கள் காட்டிய பெளத்த நெறியில் பயணித்து, புத்தரும் அவரது தம்மமும் என்ற வாழ்வியல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் மாமன்னர் அசோக சாம்ராட் அவர்களின் ஜனநாயக முறையிலான ஆட்சியை, இந்தியாவில் பெளத்தவழியில் அமைப்பதற்கு நாம் அனைவரும் உறுதிக் கொண்டு போராடும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்! 

ஜெய்பீம், ஜெய்புத்தம்....

மேற்கண்ட பதிவை தொகுப்பதற்கு தூண்டுகோலாகவும், பதிவைச்  செம்மைப்படுத்தியும், முறைப்படுத்தியும் கொடுத்த, பாபாசாகேப் அவர்களை முழுமையாகக் கற்றுணர்ந்த எனதருமை ஆசான், 
மூத்த வழக்கறிஞர் ஆ.கெளதமன், எம்.ஏ., பி.எல்.,(சென்னை உயர்நீதி மன்றம்) அவர்களுக்கு நன்றிகள் கோடி....

இவண்
எ. அன்பரசு, தமிழ்நாடு
ஏஜி அலுவலக எஸ்சி/எஸ்டி நலச் சங்கம்

No comments:

Post a Comment