Saturday, July 25, 2020

அருந்ததியர் சமுதாயத்தினர்

மதுரைமாவட்டம் மற்றும் மதுரை நகர் பகுதியிலுள்ள துப்புரவுப் பணியாளர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்வு நிலை, கல்வி, பொருளாதாரம், அரசியல் விழிப்புணர்வு மற்றும் பிற சமூக மதிப்பு குறித்தும் மதுரையில் இருக்கும் அன்னை தெரசா ஊரக வளர்ச்சி அறக்கட்டளை ஆய்வு செய்துள்ளது. அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட சில முக்கியத் தகவல்கள்.

துப்புரவுப்பணியில் அருந்ததியர் சமுதாயத்தினர்

தற்போது துப்புரவுப் பணி என்பது பெரும்பான்மையாகத் தாழ்த்தப்பட்ட பட்டியல் இன மக்களில் அருந்ததியர் எனும் சமூகத்தைச் சேர்ந்த மக்களால் மட்டும் செய்து வரும் இழிவு நிலைத் தொழிலாகவே இருந்து வருகிறது. மதுரை நகரில் கடந்த 70 வருடங்களுக்கு முன் துப்புரவுப் பணிகளுக்கான வேலைகளை தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த சுமார் இரண்டு சதவிகித மக்கள் தொகையைக் கொண்ட குறவர் எனும் பிரிவினர்  மட்டுமே செய்து வந்தனர்.  துப்புரவு சார்ந்த பணிகளைச் செய்வதால் அவர்களுக்கு வீடுகளில் கிடைக்கும் மீதமான உணவுகள், தெருக்களில் கிடைக்கும் எச்சில் இலை கழிவுகள் போன்றவற்றைக் கொண்டு துப்புரவுப் பணியுடன் பன்றி, ஆடு, மாடு போன்ற கால்நடைப் பிராணிகளையும் வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் மதுரை நகரில் மக்கள்தொகை பெருக்கம் காரணமாக குறைந்த மக்கள் தொகை கொண்ட குறவர் இன மக்களால் துப்புரவுப் பணியை முழுமையாகச் செய்திட முடியவில்லை. அச்சமயம் தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த அருந்ததியர் என்று அழைக்கப்படும் சக்கிலியர் இன மக்கள் மதுரையைச் சுற்றிலுமுள்ள மாவட்டங்களில் விவசாயம், தோல் சம்பந்தமான தொழில்களைச் செய்து வந்தனர். அத்தொழிலில் சரியான வேலைவாய்ப்பில்லாத நிலையில் வாழ்க்கையை ஓட்டப் பிழைப்பைத் தேடி இந்த சமுதாயத்தினர் மதுரை நகர் நோக்கி வேலை தேடி வரத்துவங்கினர். 1940-ஆம் ஆண்டுக்குப் பின் வந்த காலத்தில் இவ்வின மக்கள் பெருமளவில் மதுரையை நோக்கி வந்தனர்.

இக்காலங்களில் கல்வி அறிவு பெறாத இவ்வின மக்களுக்கு மதுரை நகரில் உடனே கிடைத்த வேலைவாய்ப்பு துப்புரவு சார்ந்த பணிகள்தான். இவர்களுக்கு முன்பு இப்பணியை மதுரை முழுவதும் பிற தாழ்த்தப்பட்ட சமுகத்தினரும் செய்து வந்தனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் துப்புரவுப் பணி செய்யும் தாழ்த்தப்பட்ட மக்களை கல்வி, பொருளாதாரம், அரசியல் விழிப்புணர்வு போன்றவற்றில் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பல்வேறு மத அமைப்புகள் செயல்படத் துவங்கின. அவர்களின் அப்போதைய பிரச்சாரம் நீங்கள் எங்கள் மதங்களைப் பின்பற்றுங்கள் உங்களுக்குக் கல்வி, உணவு, உடை, பொருளாதார முன்னேற்றம், அரசியல் விழிப்புணர்வு போன்ற அனைத்தையும் நாங்கள் இலவசமாகத் தருகிறோம் என்பதாகவே இருந்தது. தாழ்த்தப்பட்ட துப்புரவுப்பணி மற்றும் கடைநிலைக் கூலித்தொழில் செய்யும் மக்களிடம் பெருமளவில் இது போன்று பிரச்சாரம் செய்தனர். இதன் விளைவாகத் தாழ்த்தப்பட்ட பிரிவுகளில் மொத்தம் உள்ள 76 பிரிவுகளில் முக்கியமான மூன்று பிரிவு மக்களான பள்ளர், பறையர், அருந்ததியர் இன மக்களில் அருந்ததியர் என்று அழைக்கப்படும் சக்கிலியரைத் தவிர மற்ற இருபிரிவினர் உணவு, உடை, கல்வி போன்றவற்றைப் பெற்றுக் கொண்டு மதம் மாறினர். இந்த இரு பிரிவினர்களில் ஓரளவு வசதியுடையவர்கள் இந்திய அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளித்த 18 சதவிகித இட ஒதுக்கிட்டீன் சலுகையைப் பயன்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பங்கீடு போன்றவற்றில் சலுகைகளைப் பெற்று முன்னேற்றமடைந்தனர்.

இதனால் 1970க்குப்பின் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் அல்லாத பிற பிரிவு மக்கள் கல்வி அறிவு பெற்று துப்புரவுப் பணி அல்லாத வேலைவாய்ப்புகளைப் பெற்றுச் சென்று விட்டனர். இந்நிலையில் அறியாமை மற்றும் விழிப்புணர்வின்மை காரணமாக தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த அருந்ததியர்கள் மட்டும் கல்வி அறிவின்மையாலும், பொருளாதாரத்தில் முன்னேற்றமின்மையாலும்  தற்போதும் துப்புரவு சார்ந்த பணிகளான தெருக்கூட்டல், கழிவுநீர், பாதாள சாக்கடை அகற்றுதல், மலம் கலந்த கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்தல், மனித மலங்களை அகற்றுதல், மருத்துவமனைகளில் அனைத்துவிதமான நோயாளிகளுக்கும் சிகிச்சைக்குப் பின் ஏற்படும் மருத்துவக் கழிவுகள், மற்றும் பிணவறைகளில் இறந்த உடல்களை அப்புறப்படுத்துதல், நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சுடுகாடுகளில் பிணங்களை எரியூட்டுதல், பின் அப்பகுதியைச் சுத்தப்படுத்துதல், தெருக்களில் இறந்து கிடக்கும் அனாதைப் பிணங்கள் மற்றும் நாய், கழுதை போன்ற மிருகங்களின் இறந்த உடல்களையும் அப்புறப்படுத்தி அடக்கம் செய்தல் போன்ற இழிவுநிலைத் தொழில்களை முழு அளவில் செய்து வருகின்றனர்.

துப்புரவுப் பணியாளர்களின் பணி மற்றும் குடும்பநிலை

1. துப்புரவுப்பணி என்பது அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் துவங்க வேண்டியுள்ளது. அதாவது காலை 5 மணிக்கு முன்பாக தெருக்கூட்டல், அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் இந்தப்பணிகளைத் துவக்க வேண்டியது அவசியமானதாக இருக்கிறது.

2. துப்புரவுப் பணியாளர்களில் பெண் பணியாளர்களுக்கு தெருக்கூட்டுதல், தெருக்களில் இருக்கும் மனித மலங்கள் மற்றும் விலங்கினங்களின் மலங்கள் போன்றவற்றை அகற்றி அவைகளைக் கழிவுக்கூடைகளில் கொண்டு சென்று கழிவுபொருள் அகற்றும் வாகனங்களுக்குக் கொண்டு சென்று கொட்டுதல், ஒவ்வொரு வீடுகளிலும் வைத்திருக்கும் கழிவுகளைப் பெற்று அவற்றையும் கழிவுப்பொருள் கொண்டு செல்லும் வாகனங்களுக்குக் கொண்டு சென்று கொட்டுதல் மற்றும் பொதுக் கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகள் இருக்கிறது.

3. ஆண் துப்புரவுப் பணியாளர் என்றால் பெண் துப்புரவுப் பணியாளருக்கான பணிகளுடன் கழிவுகள், குப்பைகளைச் சேகரித்து அதற்கான வாகனங்களில் எடுத்துச் சென்று அரசு ஒதுக்கியுள்ள குப்பைக் கிடங்குகளில் கொட்டி வருவது, கழிவுநீர் தொட்டிகளில் இறங்கிப் பணி செய்வது அதில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றி சுத்தம் செய்வது, சில சமயங்களில் கழிவுநீர்ச் சாக்கடைத் தொட்டிக்குள் இறங்கி வேலை செய்வது போன்ற கடுமையான உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்களைத் தோற்றுவிக்கும் பணிகளையும் செய்ய வேண்டியிருக்கிறது.

4. இதே போல் மருத்துவமனைகளில் பல்வேறு விதமான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் போது வரும் மருத்துவக் கழிவுகளை அகற்றுதல், பிணவறைகளிலுள்ள இறந்த உடல்களை அகற்றுதல், இறந்தவர்களின் உடல்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டிருந்தால் அதனால் வரும் கழிவுகளை அகற்றுதல் என்று மருத்துவப்பணிகளில் இருக்கும் கடைசிப் பணிகளையும் இந்தத் துப்புரவுப் பணியாளர்களே செய்கின்றனர். இதனால் இப்பணியாளர்கள் பல்வேறு கிருமித் தொற்றுதல்களால் உடல்வழியாகவும், மனவழியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஏற்படும் மனபாதிப்பைக் குறைக்க மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர்.

5. இவர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவதால் இவர்கள் வருவாய் முழுவதும் மதுப்பழக்கத்திற்கே செலவழிக்கப்படுகிறது. இதனால் இவர்கள் குடும்பத்திற்கு பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்பட்டு அதிக வட்டிக்குப் பணம் வாங்கிக் கடனாளியாகவும் ஆகிவிடுகின்றனர். இச்சூழலில் இவர்களது குடும்பத்தின் எதிர்காலம் என்பது கேள்விக்குறிகளாகவே தொடர்கிறது.

6. துப்புரவுப் பணியாளர் குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் கல்வியறிவு பெறாமல் துப்புரவு பணிக்குச் செல்வதுடன், அதிகாலையிலேயே அப்பணிக்குச் சென்று விடுவதால் அவர்களின் குழந்தைகளைப் பராமரிக்கவோ, பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பவோ வேறு ஆட்கள் யாருமில்லாமல் போவதால் அவர்களது படிப்பு கடைசி நிலையிலேயே இருக்கிறது.

7. தந்தை வாங்கும் சம்பளம் முழுவதையும் ஒவ்வாத பணியின் காரணத்தால் மன உளைச்சலில் மதுப்பழக்கத்திற்காகச் செலவிட்டு விடுவதாலும், தாய் வேலை செய்யும் இடங்களில் கிடைக்கும் முந்தைய நாள் உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொண்டு வந்து கொடுப்பதாலும் அவர்களுக்குச் சரியான உணவு என்பதும் கிடைக்காத நிலையே இருக்கிறது.

8. இதன் தொடர்ச்சியாக இந்த அருந்ததியர் இனத்தில் ஆண்பிள்ளை என்றால் பதினான்கு வயதாகும் போதே கல்வி அறிவு, பொது அறிவு, பகுத்தறிவு போன்றவை இல்லாத காரணத்தால் அப்பையனும் தன் முன்னோர்கள் செய்து வந்த அதே துப்புரவு சார்ந்த பணியையே செய்யவே முற்படுகிறான். துப்புரவுப் பணியாளர்களின் பெண் குழந்தைகளும் இதேபோல் துப்புரவுப் பணியைத்தான் செய்யத் துவங்குகிறாள். மேலும் இவர்கள் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டு விடுகின்றனர். துப்புரவுப்பணியில் இருப்பவர்களில் பெண்களில் அதிகமானவர்கள் பதினைந்து வயதிலேயே குழந்தைகளைப் பெற்றுத் தாயாகி விடுகின்றாள்.

9. இப்படி துப்புரவுப் பணியாளர்களில் நடைபெறும் சிறுவயதுத் திருமணங்களால் அவர்களுக்கிடையே சரியான புரிந்துணர்வுகள் இருப்பதில்லை. மேலும் ஒவ்வாத பணியும், மதுப்பழக்கமும், தொற்றுநோய்த் தாக்குதலும் துப்புரவுப் பணியாளர்களான ஆண்கள் அதிகமாக 40 வயதிற்குள்ளாகவே மரணமடைந்து போகும் பரிதாப நிலையும் இருக்கிறது. இதனால் துப்புரவுப் பணி செய்யும் பெண்களில் பலரும் இளம்வயதிலேயே விதவைகளாகி வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். மதுரை மாநகராட்சியில் துப்புரவுப்பணி செய்யும் பெண்களில் 94 சதவிகிதப் பெண்கள் பணிக்காலத்தில் கணவனை இழந்து தமிழ்நாடு அரசின் கருணை அடிப்படையிலான பணிக்கு வந்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

10. துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் அனைவரும் கல்வி கற்கும் ஆவலில் இருக்கின்றனர். இவர்களுக்கு அவர்களின் வீட்டுச்சூழல், மதுப்பழக்கத்திற்கு அடிமையான தந்தை, கல்வி அறிவில்லாத தாய் என்று குடும்பத்தின் வறுமை நிலை, போதிய குடியிருப்பு வசதியின்மை போன்றவை கல்வியில் பிந்தங்க வைக்கிறது. மேலும் தமிழ்நாடு அரசின் 1 முதல் 8 வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி போன்றவை அவர்கள் பாடங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் ஒன்பதாம் வகுப்பில் படிக்க முடியாமல் கடைசி நிலையில் தங்கவைத்து விடுவதும் அதிலிருந்து தாண்டி பத்துக்குச் செல்வது என்பது இன்றும் இயலாத நிலையாகவே இருக்கிறது. இதனால் 10 ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கான அரசு சலுகைகள், கடனுதவிகள் போன்றவைகளைப் பெறமுடியாமல் இருக்கின்றனர். இந்த சலுகைகளை தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இன சமுதாயத்தினர் தவிர பிற சமுதாயத்தினர்களே தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

11. துப்புரவுப்பணியில் இருக்கும் பெண்களிடம், அவர்கள் இயலாமையைப் பயன்படுத்தி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திக் கொள்ளும் தவறான செயல்களும் ஒரு சில இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன என்பதும் ஒரு வேதனையான தகவல்.

அருந்ததியர் இன மக்கள் அறியாமையும் அரசின் சலுகைகளும்

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்திய அரசியல் விதிகளின்படி கல்வி, அரசியல், வேலைவாய்ப்பு போன்றவற்றில் 18 சதவித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

1. அரசியல்

* தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் 42 பேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள். இவர்களில் பள்ளர், பறையர் எனப்படும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 40 பேர் இருக்கின்றனர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு பேர் மட்டுமே இருக்கின்றனர்.

* இது போல் தமிழ்நாட்டில் இருக்கும் மக்களவை உறுப்பினர்கள் 39 பேர். இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் 7 பேர். இந்த ஏழு பேரில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர் ஒருவர் மட்டுமே.

அரசியலில் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் பின்தங்கிப் போயிருப்பதற்கு இந்த சமுதாயத்தினரின் பொருளாதாரத் தாழ்வு நிலை, கல்வியின்மை, அரசியல் விழிப்புணர்வின்மை மற்றும் அரசியல் கட்சிகளின் புறக்கணிப்பும்தான் முக்கியக் காரணிகளாக இருக்கின்றன.

2. கல்வி

* அரசு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு இலவசக் கல்வி மற்றும் இலவச விடுதி வசதி, உதவித்தொகை போன்றவைகளை வழங்குகின்றன. இந்த சலுகைகளை அருந்ததியர் இன மக்கள் பய்னபடுத்துவது அரிதாகவே இருக்கின்றது. ஏனென்றால் இந்த இனத்தில் பத்தாவது வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்கள் மிகக் குறைவு. இந்த சமுதாய மக்கள் மற்ற தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களாலும் ஒதுக்கப்பட்டவர்களாகவே கருதப்படுகின்றனர். இந்த அருந்ததியர் இன சமுதாயத்தினர் அரசின் கல்விச் சலுகைகளைப் பெற்று உயர்கல்வி படிப்பது என்பதே குறைவாகத்தான் இருக்கிறது.

* தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளில் துப்புரவுப் பணியாளர் மற்றும் தோல் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அறியாமையால் அருந்ததியர் இன மக்கள் இந்த சலுகைகளை அதிக அளவில் பெற்றுப் பயனடைய முடியாமலேயே இருந்து வருகின்றனர்.

3. அரசு உதவிகள்

* தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை மூலம் தாட்கோ வழியாக பல்வேறு தொழில்களுக்கான கடன்கள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது. இந்தச் சலுகைகளையும், பயிற்சிகளையும் வசதியுடைய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர்களே பெற்றுப் பயனடையும் நிலை இருக்கிறது. இதில் பயனடந்த அருந்ததியர் சமுதாயத்தினர் இரண்டு சதவிகிதம் மட்டுமே என்பது வேதனைக்குரிய ஒன்று.

அருந்ததியர் இன அமைப்புகள்

* கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தாழ்த்தப்பட்ட இனத்திலும் ஓர் ஒடுக்கப்பட்ட இனமான அருந்ததியர் என்று அழைக்கப்படும் சக்கிலிய இன மக்களிடம் செயல்படும் அருந்ததியர் இன அமைப்புகள் எல்லாம் சிறிது காலத்தில் காணாமல் போய்விடுகிறது.

* பிற இனத்தவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு எளிதில் பலியாகிவிடும் இவர்கள் ஒற்றுமைப்பட்டு நிற்பது என்பது இன்றுவரை கேள்விக்குரியதாகவே இருக்கிறது.

* அருந்ததியர் இன மக்களிடம் அவர்கள் தற்போது வாழ்ந்து வரும் பகுதிகள் குறித்த பாகுபாடு இருந்து வருவதால் தமிழகம் முழுவதும் இவர்களை ஒன்றிணைப்பதில் கருத்து வேறுபாடுகளும், அமைப்பு வழியில் ஒற்றுமையின்மையும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன.

* அருந்ததியர் இனத்தில் பல தலைவர்களும் பல அமைப்புகளும் செயல்படுவதால் குறிப்பிட்ட கொள்கைகள், நோக்கங்கள் எதையும் அடைய முடியாமல் பின்னடைவுகள்தான் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

* அருந்ததியர் இன மக்கள் முன்னேற்ற அமைப்புகள் எனும் பெயர்களில் சில தொண்டு நிறுவனங்கள் துவங்கப்பட்டு அருந்ததியர் இன மக்கள் முன்னேற்றத்திற்காக அரசு ஒதுக்கும் பணத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன.

* சில வெளிநாட்டு அமைப்புகள் துப்புரவுப்பணியில் இருப்பவர்களுக்காக சில உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த உதவித்தொகையை அருந்ததியர் இனத்தின் ஒரு சில அமைப்புகள் பெற்றுக் கொள்கின்றன. ஆனால் இந்த அமைப்புகளில் இருக்கும் குறிப்பிட்ட சிலர் மட்டும் பயன்படுத்திக் கொண்டு அருந்ததியர் இன முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தியது போல்  காண்பித்துக் கொள்ளும் தவறான போக்கும் இருக்கிறது.

இப்படி கல்வி, சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரம் போன்ற அனைத்து வழிகளிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலும் தனிமைப்படுத்தப்பட்ட சமுதாயமாக இருந்து வரும் அருந்ததியர் இன சமுதாயத்திற்கு தமிழ்நாடு அரசு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்துள்ளது. இந்த உள் ஒதுக்கீட்டில் அருந்ததியர் இன மக்கள் முன்னேற்றமடைந்து மற்ற சமுதாயத்தினரைப் போல் வருவதற்கு அவர்களுக்கான அடிப்படைக் கல்வியும், பொருளாதார நிலையும் முதலில் ஏற்றமடைந்தால் மட்டுமே அரசின் எண்ணம் ஈடேறும். முதலில் அருந்ததியர் இன மக்களின் மீது தனிப்பட்ட கவனம் கொள்ளும் கல்விக்கூடங்கள் அமைக்க அரசு முன்வரவேண்டும்.

சக்கிலியர், அருந்ததியர்கள் இவர்கள் 2009 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு வழங்கிய 3 சதவீகித உள் ஒதுக்கிட்டின் படி அரசு கல்வி நிறுவனங்களிலும் மற்றும் வேலை வாய்ப்பிலும் இடம் கிடைக்கப்பட்டாலும்,தனியார் கல்வி நிறுவனங்களில் இவர்கள் கட்டணம் செலுத்தி படிக்க முடியா சூழ்நிலையில் உள்ளனர். ஒரு சிலர் தனியார் நிறுவனங்களில் சேர்ந்தாலும் அவர்களின் குடும்பம் கடன் சுமையில் சிக்கி மிகவும் அவதிபடுகின்றனர். தனியார் நிறுவனங்கள் இவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதில் தயக்கம் கட்டி மறுக்க படுகின்றனர். இதன் காரமாக பட்ட படிப்பு முடித்தவர்கள் கூட தொழிலாளிகளாகவே இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

 

 
மலம் அள்ளுதல் அருந்ததியரின் குலத்தொழிலா? கோ.ரகுபதி
 
இந்தியாவில், சமூக அறிவியல் ஆய்வுப் புலத்தில் இந்தியர் மற்றும் இந்தியரல்லாத ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வுகளில் சாதிகளின் வரலாற்றினை எழுதுகிற பொழுது அது ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திலிருந்து தொடங்கப்படுகிறது; அதுவே அச்சாதியின் தோற்ற வரலாறாகவும் முன்னிறுத்தப்படுகிறது. அந்த குறிப்பிட்ட காலக்கட்டம் இரண்டுவித தன்மையை குறிக்கிறது: முதலாவது, மரியாதை, ஆதிக்கம், புனிதம் போன்ற சொற்களாலும் இரண்டாவது இழிவு, தோல்வி, அவமரியாதை, தீண்டாமை போன்ற சொற்களாலும் சுட்டுவதாக இருக்கிறது.தீண்டாமை-ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சாதிகளின் சமூக வரலாறு அவர்கள் ஒடுக்கப்பட்ட காலத்திலிருந்துதான் தொடங்கப்படுகிறது.

காலனிய ஆட்சியாளர்கள் தங்களின் தேவை கருதி பதிவு செய்த ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு அவ்வரலாறு எழுதப்படுகிறது. எட்கர் தர்ட்ஸனின் தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூல் பலருக்கும் ஆயத்த வரலாறு போல் பயன்பட்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, பறையடிப்போர் பறையர் என்று கால்டுவெல் கூறியதைக் குறிப்பிடலாம்.இதன் விளைவு, பறையர் என்றழைக்கப்படும் சாதியினர் முழுவதும் பறையை மட்டுமே அடித்துக் கொண்டிருந்தனரா? பறையரில் சுண்ணாம்பு பறையர், உழவுப் பறையர், ஈழுவப் பறையர் போன்ற பல்வேறு பிரிவுகள் பலவகையான தொழிற் பிரிவுகளோடு தொடர்புப் படுத்தப்பட்டு அழைக்கப்படுவதன் காரணம்என்ன? பண்டையத் தமிழ் மொழி இன்றும் புழக்கத்திலிருந்து வரும் கேரளத்தில் (சேர நாடு) பறை என்பதை “கூறு, சொல்” என்ற பொருளில் ஏன் பயன்படுத்தப்பட்டு வருகிறது? இதற்கும் பறையர் எனப்படும் சாதியினருக்கும் உள்ள உறவு என்ன? போன்ற கேள்விகள் எழுப்பப்படுவதில்லை.
பறையடிப்போர் பறையர் என்று மேலோட்டமாகக் கூறுவது அச்சாதியினரின் தோற்றத்தினை மட்டுமல்லாமல் வரலாற்றினை மேலோட்டமாக அணுகும் ஆய்வாளர்களின் மனப்பாங்கினையே வெளிப்படுத்துகிறது. இந்த ஆயத்த வரலாற்றினை மறுதலித்து ஒவ்வொரு சாதியினரும் தங்களது சாதியின் வரலாற்றினை எழுதி வருகின்றனர். இதில் இருக்கின்ற வேடிக்கை என்னவென்றால் இவர்களும் எட்கர் தர்ட்ஸனையே நாடுகின்றனர். அவருடைய நூலில் சாதிகளின் தோற்றம் இவ்வாறு பதிவு செய்யப் பட்டிருக்கும்: பார்ப்பனருக்கும் சூத்திரருக்கும் பிறந்தவர்கள், வெள்ளாளர்களுக்கு அல்லது பார்ப்பனர்களுக்கு விவசாய உற்பத்தி செய்து கொடுப்பதற்கான கடவுளின் படைப்பு, புனிதமாகப் கருதப்பட வேண்டிய பசுவின் உணவினை தின்றுவிட்டதனால் தாழ்ந்து விட்டார்கள். இந்த தோற்ற வரலாற்றில் பார்ப்பனீயமயமாக்கம்/இந்துமயமாக்கம் அடிநாதமாக இருப்பதனைக் காணமுடியும்.எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிற பார்ப்பனர்கள் இந்தியாவில் குடியேறியவர்கள் என்ற வரலாறு இருக்கிற பொழுது பார்ப்பனர்களுக்கும் சூத்திரர்களுக்கும் பிறந்தவர் அல்லது பார்ப்பனர்களுக்கு சேவகம் செய்வதற்குப் படைக்கப்பட்டவர்கள் என்ற கூற்றினை ஏற்றுக் கொள்வதில் அடிப்படை யிலேயே சிக்கல் இருக்கிறது. பார்ப்பனர்கள் வருகைக்கு முன்னர் குறிப்பிட்ட சாதிகளின் வரலாறு என்ன? இக்கேள்வி எட்கர் தர்ட்டஸனாலேயே எழுப்பப்பட்டிருக்கவில்லை, இதானல் நாம் அவர் மீதோ அல்லது அவரின் பதிவு மீதோ சந்தேகிக்க வேண்டிய அவசியம் இல்லை. வெளிநாட்டவரான அவர் ஒவ்வொரு சாதி குறித்த சித்திரங்களை யாரிடமிருந்து பெற்றுக்கொண்டார்?ஒவ்வொரு சாதி குறித்தும் நமக்கு வழங்கப்பட்டிருக்கும் சித்திரம் என்றென்றைக்கும் அச்சாதிக்கு நிரந்தரமானதாக இருந்து வருகிறது; இனி வருங்காத்திலும் அவ்வாறு இருக்கும் என்ற எண்ணப் போக்கினை உருவாக்கி இருக்கிறது. (சித்திரம் என்று இங்கு குறிப்பிடுவது ஒரு குறிப்பிட்ட சாதியின் குலத்தொழில், சமூகத்தில் அவர்களுக்கான மதிப்பு போன்றவற்றைக் குறிக்கும்.) இது படிக்காத பாமரர்களிடம் மட்டுமின்றி படித்த வர்க்கத் தினரிடமும் இருந்து வருகிறது.
தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் தான் சார்ந்திருக்கும் சாதி உறுப்பினர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிற மாற்றத்தினை ஏற்றுக் கொள்கிற அல்லது மாற்றத்தை வலியுறுத்துகிற ஒருவருக்கு தன்னைப்போல்/தன்னுடைய சாதியைப் போல் பிற சாதியினரிடத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணும் மனப்பாங்கு இல்லை. தன்னுடைய சாதிக்கு வழங்கப்பட்டிருக்கும் சித்திரத்தைக் கட்டுடைத்துவிட்டு தங்களின் கடந்த காலத்தை போற்றிப் புகழ்வதற்கு முற்படும் சாதியினர் பிற சாதியினருக்கு வழங்கப்பட்டிருக்கும் சித்திரத்தை மறுப்பதற்குப் பதிலாக ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் சித்திரம் இயற்கையானதே என்று நம்புவது சாதிகளுக்கு உரிய ஒரு பொதுப்புத்தியாகும்.தன்னுடைய சித்திரத்தை மறுக்கும் சாதியினர் பிறரின் சித்திரத்தை இயற்கையானது என்று நம்புவதற்கான உதராணமாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சாதி இந்துக்கள் மற்றும் பார்ப்பனர்களிடத்தில் தலித்துகள் குறித்த இருந்துவரும் சித்திரத்தைக் கூறலாம். தன்னுடைய சித்திரத்தை மறுத்தலும் பிறரின் சித்திரத்தை ஏற்பதும் என்ற முரணான பண்புகள் தலித்துகளிடத்திலும் இருந்து வருகிறது. ஆதலால் சாதிகள் குறித்த சித்திரத்தை கேள்விக்குள்ளாக்குவதும், ஒரு சாதிக்கென ஒரு சித்திரத்தை ஏற்படுத்தாமல் அதற்கு மாறாக, ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருக்கிற சித்திரைத்தினை கட்டுடைப்பதும் ஒரு சாதியின் வரலாற்றினை எழுதுவதற்கு திறவுகோலாக அமையும்.
இங்கு அருந்ததியர் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சாதியினர் குறித்து இருந்து வரும் சித்திரம் கேள்விக் குள்ளாக்கப்படுகிறது.அட்டவணை பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சக்கிலியர், மாதாரி, பகடை என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் சாதியினர் தங்களை அருந்ததியர் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்; இம்முயற்சி காலனிய ஆட்சிக் காலத்திலேயே தொடங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் குறித்து பொதுவாக இருந்து வரும்/வழங்கப்பட்டிருக் கும் சித்திரம்: செத்த மாடு தூக்குவது, இழவுச் செய்தி சொல்வது, பிணம் எரிப்பது, குலவையிடுவது, இறப்பு விசேஷம், தீச்சட்டி தூக்குவது, செருப்புத் தைப்பது, களம் புடைப்பது, வெட்டியான், துப்புரவுப் பணி ஆகியவற்றை அவர்களின் குலத்தொழில்களாக குறிப்பிடுகிறார் மாற்கு (2001;270-280).செருப்பு தைத்தல் மற்றும் துப்புரவு பணி தவிர இதர தொழில்கள் பல்வேறு இடங்களில் பறையர், பள்ளர், நாவிதர், அம்பட்டர் போன்ற சாதிகள் அதனைச் செய்திருக்கின்றனர்; செய்துவருகின்றனர். செருப்பு தைத்தல், துப்புரவு பணி, மலம் அள்ளுதல் போன்றவையே அருந்ததியர்களின் குலத்தொழில் என்ற சித்திரம் பிற சாதியினரிடம் மட்டுமல்லாது அருந்ததியர்களிடமும் இருந்து வருகிறது. இந்த சித்திரத்தை மறுக்கின்ற போக்கும் தங்களின் வரலாற்றை தாங்களே எழுதும் முயற்சியும் அருந்ததியர்களிடம் 1990களில் தொடங்கியிருக்கிறது.எழில். இளங்கோவன் அருந்ததியர்கள் அரச மரபில் வந்து நாட்டை ஆண்ட பரம்பரையினர், என்கிறார். (1995;10). சொல் ஆய்வு மூலமாக அருந்ததியர்களை ஆண்ட பரம்பரையினர் என்ற வரலாற்றினை எழுத முற்படுகிறார் அவர். அருந்ததியர் என்று அழைத்துக் கொள்பவர்களில் மாதியர்களும் அடக்கம். எழில். இளங்கோவன் மாதியர் என்ற பெயரை தமிழ் இலக்கணப்படி மா+அதியர் என்று பிரிக்கிறார். மா என்றால் பெரிய என்றும், அதியர் என்றால் தலைவர், அருமை+ அதியர்=அருந்ததியர் என்றும் பொருள் என்கிறார் அவர். இவரின் இலக்கணம் நீண்டு சங்க காலத்திற்குள் நுழைந்து இறுதியாக அருந்ததியர்களை ஆண்ட பரம்பரையோடு இணைத்து விடுகிறார்.
சொல் ஆராய்ச்சி மூலம் தங்கள் சாதியை ஆண்ட பரம்பரையோடு இணைத்துக் கொள்வதற்கு பிற சாதியினர் பின்பற்றி வரும் பழைய முறையையே எழில். இளங்கோவனும் பின்பற்றுகிறார்.ஆண்ட பரம்பரை வரலாற்றை கட்டமைப்பவர்கள் ஒவ்வொரு ஆட்சியும், சமூக மாற்றமும் ஒரு சாதியை எவ்வாறு தோற்றுவித்தது? அல்லது இருக்கிற ஒரு சாதி பிற சாதியோடு எவ்வாறு கரைந்தது? என்பது குறித்த ஆய்வுக்குள் செல்வதில்லை. இக்கட்டுரை பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கி தங்களை அருந்ததியர் என்று அழைத்துக் கொள்கின்ற சாதியினர் எவ்வாறு மலம் அள்ளும் தொழிலுக்குள் புகுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதை எடுத்துரைப்பதற்கு முயற்சிக்கிறது.அருந்ததியர்: தோல் பொருட்கள் உற்பத்தியாளர்அருந்ததியர் குறித்து தமிழகத்தின் பண்டைய கல்வெட்டுக்களிலோ அல்லது இலக்கியங்களிலோ பதிவு செய்யப்பட்டிராத காரணத்தினால் கட்டுரை மேற்கொள்கின்ற ஆய்வுக்கு காலனிய ஆட்சியாளர்கள் பதிப்பித்திருக்கும் மாவட்டக் கையேடு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு போன்றவையே முக்கியமான ஆதாரமாகும்.ஆர்தர் எப். கோக்ஸ், முகமதியர்களும் லப்பைகளும் தோல்தொழிலில் ஈடுபடும் வரை அத்தொழிலில் மாதிகா, சக்கிலியர்கள் ஏகபோகம் செய்துவந்தனர் (1881;303) என்றும், லீ ஃபனு, சக்கிலியர்கள் முக்கியமாக தோல் தயாரிப்பிலும் செருப்பு உற்பத்தி செய்வதிலும் சில சமயம் விவசாயத்திலும் ஈடுபடுகின்றனர் (1883; 133) என்று குறிப்பிட்டுள்ளனர்.தொழில்வாரியாக ஒவ்வொரு சாதியையும் வகைப்படுத்தியிருக்கும் ஹரால்டு ஏ ஸ்றுயர்ற், தோல் வேலை செய்பவர்களாகவே சக்கிலியர்களையும் மாதிகாக்களையும் வகைப்படுத்தியிருக்கிறார் (1898; 23). எட்கர் தர்ட்ஸன், நீர் இறைப்பதற்கான கமலை, எண்ணெய் வைத்துக் கொள்வதற்கான பை, சாட்டை, சிறிய தோல் பை போன்றவற்றை தயாரிப்பது சக்கிலியர்களின் தொழிலாக குறிப்பிட்டுள்ளார் (1904;2-7).மேலும், மாதிகா குறித்து தனியே பதிவு செய்திருக்கும் இடத்திலும் இவர்கள் தோல் தொழில் செய்பவர்கள் என்றே குறிப்பிட்டுள்ளார் (1904; 292-325). கன்னல் செடர்லாப் தனது நூலில் அருந்ததியர்களை தோல் பொருட்கள் உற்பத்தியாளர் என்று கூறியுள்ள அவர் நூலின் முன்னுரையிலேயே தோல் வேலைசெய்கின்ற அருந்ததியர்களின் முக்கியத்துவத்தை பின்வருமாறு விவரித்துள்ளார்: ஒவ்வொரு கிராமத்திலும் திறமையான தோல் வேலை செய்பவர்கள் வசித்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் வறட்சியான பகுதிகளில் விவசாயிகள் தோல் தொழிலாளர்களை சார்ந்திராமல் லாபம் பெறமுடியாது. ஒரு விவசாயி தோல் தொழிலாளர்களை விவசாய தொழிலாளர்களாக நியமித்திருப்பதற்கான காரணம் என்னவென்றால் நீர் இறைப்பதற்கே(1997;1). மேலே எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் ஆதாரங்கள் அருந்ததியர்கள் தோல் பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் என்று கூறுவதிலிருந்து அவர்களின் தொழில் மலம் அள்ளுவதோ அல்லது துப்பரவு பணி செய்வதோ அல்ல என்பது திண்ணம்.இருப்பினும், இதனை மேலும் வலுப்படுத்துவதற்கு சில அடிப்படையான கேள்விக்கு பதில் காணவேண்டியது அவசியம். அக்கேள்வி இதுதான்:1. இந்தியர்கள் மலம் கழிப்பதற்கு காடுகளைப் பயன்படுத்தினரா? அல்லது கழிப்பறையை பயன்படுத்தினரா?2. தெருக்களை சுத்தம் செய்வதற்கு அருந்ததியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனரா?கிராமங்களில் கழிப்பறை என்ற முறை பெரும்பாலும் இருந்திருக்கவில்லை; காடுகளில் மலம் கழிக்கும் வழக்கம்தான் இருந்திருக்கிறது, இன்றும் இருந்து வருகிறது. இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு அருகே உள்ள சாத்தர்பூர் என்ற கிராமத்தில் பார்ப்பனர்கள் திறந்த வெளியையே கழிப்பிடத்திற்கு பயன்படுத்தியதாக ஃபிரிடம் அற் மிட் நைற் என்ற நூலின் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர் (1976; 263-4).1947ம் ஆண்டு இதுதான் கிராமங்களின் நிலைமை என்றால் எழுகின்ற மற்றொரு கேள்வி: கழிப்பறை முறையோ அதனை சுத்தம் செய்கின்ற தொழிலாளர்களோ இருந்திருக்கவில்லையா? கழிப்பறை முறை நகரத்தில்தான் தோன்றியிருக்கிறது என்பதைக் காணமுடிகிறது. இதனைக் காண்பதற்கு முன்னர் அவர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனரா என்ற கேள்விக்கான விடையினைக் காண்போம்.பொதுவாகவே, கிராமங்களில் தலித்துகள் ஆதிக்கச் சாதியினரின் தெருவிற்குள் செல்வதற்கு தீண்டாமையின் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. நகராட்சிகள் உருவான பின்னர் அதன் மூலம் தெருக்கள் சுத்தம் செய்கின்ற பணி தொடங்கிய பின்னரும் கூட தலித்துகள் அப்பணியினை ஆதிக்கச் சாதியினர் வசிக்கும் தெருக்களில் செய்வதற்கு மறுக்கப்பட்டிருந்ததனைக் காணமுடிகிறது.
திருநெல்வேலி நகராட்சி மன்றக் கூட்டத்தில் சந்நியாசி அக்ரஹாரத்தினை மேல்சாதி வேலையாட்கள் மூலமே பராமரிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிகழ்வும் (எம்.எல்.சி.டி, 18 ஆகஸ்ட் 1924; 41, 76-78), ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாராயணவரம் அக்ரஹாரத்தினை சுத்தம் செய்வதற்கு தலித்துகளை அமர்த்துவது எதிர்க்கப் பட்டதும் (எம்.எல்.சி.டி. 19 ஆகஸ்ட் 1925; 179-180) இதற்கான உதாரணங்கள்.மேலும், பிற்படுத்தப்பட்ட மக்களும்கூட அவர்களின் தெருக்களை பராமரிப்பதற்கு தலித்துகள் செல்வதை எதிர்த்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது (எம்.எல்.சி.டி, 18 ஆகஸ்ட் 1924; 78).
பார்ப்பனர்கள் முதல் பார்ப்பனர் அல்லாதோர் (தலித்துகள் தவிர்த்து) வரை தலித்துகள் தங்கள் தெருவினை சுத்தம் செய்யவதற்கு மறுத்திருக்கின்றனர் என்பது லிருந்து அருந்ததி யர்கள் கிராமங்களில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கவில்லை என்று உறுதிபடக் கூறலாம்.ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வரை மலம் அள்ளுதல் மற்றும் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிராத அருந்ததியர்கள் எப்பொழுது அப்பணியைச் செய்யத் தொடங்கினர்? இதற்குப் பின்புலமாய் அமைந்த சமூகப் பொருளாதார காரணிகள் என்ன?சமூக ஒடுக்குமுறை, தொழில் இழப்புதமிழக சாதிய அமைப்பில் அட்டவணை சாதிப் பிரிவினரில் அதிக எண்ணிக்கையில் வசித்துவரும் பள்ளர், பறையர், சக்கிலியர் ஆகிய மூன்று பிரிவினர்களுக்கிடையே யார் சமூக மதிப்பில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற போட்டி இருந்து கொண்டே வருகிறது. சோனார்ட் என்பவர் பசுவின் தோலிலிருந்து காலணி தயாரிக்கும் காரணத்தினால் அவர்கள் பறையர்களிலும் கீழானவர்கள் என்கிறார். அபெ துபே, இந்தியாவின் தென்பகுதி முழுவதும் செருப்பு தைப்பவர்கள் பறையர்களைவிடவும் கீழானவர்கள், பறையர்களும் மாதிகர்ளும் ஒருவர் மற்றொருவரிடமிருந்து உணவோ அல்லது தண்ணீரோ பரிமாறுவதில்லைஎன்கிறார். இது யார் யாரை தீண்டத்தகாதோராக நடத்தினர் என்ற கேள்வியை எழுப்புகிறது; இது ஒரு புறம் இருக்கட்டும். அவர்களுக்குள் இருக்கும் அப்பாகுபாட்டினை அறிந்த மன்னர் ஒருவர் குதிரையை பராமரிக்கும் பணியைச் செய்கின்ற பறையர் தானியத்தை திருடுவதை தடுப்பதற்கு மாதிகரைக் கொண்டு பறையர் முன்பே தானியத்தில் தண்ணீர் தெளிக்கச் செய்திருக்கிறார் (ஆர்தர் எப். கோக்ஸ், 1881; 303).அருந்ததியர் மீதான தீண்டாமைக்குக் காரணம் அவர்கள் தோல் பதப்படுத்துதல் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி செய்வதே. தோலினாலான பொருட்களுக்குப் பதில் இதர பொருட்கள் பயன்படுத்தும் முறை காலனிய ஆட்சிக் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட காரணத்தினால் தோல் பொருட்கள் தயாரிக்கும் அருந்ததியர்களின் தொழில் பாதிப்புக்குள்ளாகத் தொடங்கியிருப்பதனை அறியமுடிகிறது.

இக்காலத்தில் உருவாகிக் கொண்டிருந்த நகரங்கள், உணவு விடுதிகள் போன்றவற்றில் ஏற்படும் கழிவுகளை அகற்றுவதற்கு ஆட்கள் தேவைப்பட்டிருக்கிறார்கள். ஹரிஜன் இதழ், எவ்வித சந்தேகத் திற்கும் இடமின்றி துப்பரவுத் தொழிலாளர்கள் நகரங்களுக்குத் தேவை என்று வலியுறுத்தியிருப்பதிலிருந்து துப்புரவுத் தொழிலாளர்கள் தேவையிருந்திருப்பதனை புரிந்து கொள்ள முடிகிறது. (ஏப்ரல் 10, 1949; 44).மலம் அள்ளுதல் அல்லது துப்புரவு பணியைச் செய்வதற்கு யார் முன்வருவர்? சமூகத்தின் மேல்தட்டில் இருக்கும் சாதியினர் முன்வருவார்களா? அல்லது அரசாங்கத்தால் அவர்களை அக்காலத்தில் அப்பணியில் ஈடுபடுத்தியிருக்கத்தான் முடியுமா? சமூக அமைப்பில் யார் அடித்தட்டில் இருக்கிறார்களோ அவர்களையே இழிவு வேலைக்கு அமர்த்த முடியும்.சென்னை மாகாண அவையில் நடைபெற்றிருக்கிற விவாதங்களை வாசிக்கிற பொழுது அரசாங்கம் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரையே மலம் அப்புறப்படுத்தும் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கிறது என்பதைக் காணமுடிகிறது. 21 ஆகஸ்ட் 1925ல் ஆர். வீரையன், ‘’துப்புரவு பணியாளர் அல்லது தோட்டி வகுப்பினைச் சாராத ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் சேலம் மத்திய சிறைச்சாலையில் துப்புரவு பணி செய்வது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதா? என்று எழுப்பிய கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்: ஆம். சேலம் மத்திய சிறைச் சாலையில் பறையர் மற்றும் குறவர் சாதியைச் சேர்ந்தவர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இச்சாதியின் உறுப்பினர்கள் நகராட்சி, உள்ளாட்சி போன்றவற்றின் மூலம் துப்புரவு பணியில் அமர்த்தப்படுவதால் இங்கும் அப்பணியை செய்வதற்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என சிறைச் சாலை ஆய்வாளர் தெரிவித்திருக்கிறார் என்று பதிலளிக்கப்பட்டது (21 ஆகஸ்ட் 1925; 477).மேலும் சிறைச் சாலைகளில் பல்வேறு குற்றவாளிகள் இருப்பினும் தாழ்த்தப்பட்ட சாதியினைச் சேர்ந்த தண்டனைக் குற்றவாளிகளே துப்புரவுப் பணியில் அமர்த்தப் பட்டிருக்கின்றனர் என்பதும் தெரியவருகிறது (22 செப்டம்பர் 1937; 503). இந்த விவாதம், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் தலித் மக்களே மலம் அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதனை தெரிவிக்கிறது. இதிலிருந்து, தலித் மக்களிலேயே அடிமட்ட நிலையிலிருந்த அருந்ததியர்கள் பெருமளவில் மெல்ல மெல்ல துப்புரவுப் பணியில் ஈடுபடத் தொடங்கியிருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாது இலங்கையிலும் துப்புரவு மற்றும் மலம் அள்ளும் பணியைச் செய்வதற்கு தலித்துகள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். நிதல் சிங் 1929ம் ஆண்டு எழுதிய கட்டுரை ஒன்றில் இலங்கையிலுள்ள நகரங்களை சுத்தம் செய்வதற்கும் தனியார் தங்கும் மற்றும் உணவு விடுதிகளிலுள்ள மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கும் தென்னிந்தியா விலிருந்து ஆட்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிகழ்வினை விவரித்துள்ளார் (தி மாடர்ன் ரிவ்யூ, 1929; 549-552). எனவே, காலனிய ஆட்சிக் காலத்தில் விவசாயத்தில் நீர் பாய்ச்சுவதற்கு கமலை என்ற தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த தோலினாலான பையின் உபயோகத்தின் குறைவு, இதர தோல் பொருட்களின் பயன்பாட்டு வீழ்ச்சி அதனைத் தொடர்ந்து அருந்ததியர்களின் தொழில் இழப்பும் வறுமைக்குள் தள்ளப்படுதலும் அதே காலக்கட்டத்தில் நகரங்களில் மலம் அள்ளுதல் மற்றும் துப்புரவுப் பணிக்கான ஆட்களின் தேவை அருந்ததியர்களை அப்பணிக்குள் ஈடுபடுத்தியது எனலாம்.முடிவாக, ஒரு சாதியின் தொழில் அதன் அடையாளம் சமூகத்தில் குறிப்பாக உற்பத்தி முறையில் ஏற்படுகின்ற மாற்றத்தினால் மாறக்கூடும்; ஒரு சாதியின் பாரம்பரியத் தொழில் என்று நிரந்தரமாக ஒன்று இல்லை, இருக்கவும் முடியாது. காரணம், தமிழகத்தில் அருந்ததியர்களுக்கு முன்னர் செம்மான் (இவர்கள் பறையர்களில் ஒரு பிரிவு என்று கூறப்படுகிறது) என்ற சாதியினர் தோல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்திருப்பதனை அறியமுடிகிறது. இவர்கள் எப்பொழுது எதனால் அத்தொழிலினை இழக்க நேர்ந்தது என்பது ஆய்வுக்குரியது. காலனிய ஆட்சியின் இயந்திரமயமாக்கல் மற்றும் நகர்மயமாக்கல் சுயமான அறிவின் மூலம் தோல் பொருட்கள் உற்பத்தியாளராயிருந்த அருந்ததியர்களை மலம் அள்ளும் தொழிலாளர்களாக மாற்றியது என்றால் அது மிகையான மதிப்பீடு அல்ல. மலம் அள்ளும் பணியும் எதிர்காலத்தில் மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை, அருந்ததியர்களின் வாழ்க்கைத் தரமும் அடையாளமும் மாற்றமடையும்.
 
 
அருந்ததியர் சமூக இயக்கமும் விடுதலைக்கான குரலும்
 
அருந்ததியர்களின் சமூக இயக்கம் மற்றும் போராட்டம் குறித்து இக்கட்டுரை ஆராய முற்படுகிறது. எக்காலந்தொட்டு அம்மக்கள் துப்புரவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதனையும் கோடிட்டு காட்டுகிறது. பல்வேறு பெயர்களில் அவர்கள் அழைக்கப்படுகின்ற பொழுதும் அருந்ததியர் என்ற பெயரே கட்டுரையில் பயன்படுத்தப்படுகிறது. ‘சக்கிலியன்’, ‘மாதிகா’ என்ற பெயர்கள் தவிர்க்கவியலாத இடங்களில் மட்டுமே இடம் பெறுகின்றன. சென்னை மாகாண அவை விவாதங்கள், மாவட்டக்கையேடுகள், ஹரிஜன் இதழ் மற்றும் களஆய்வில் சேகரித்த வாய்மொழித் தரவுகள் ஆதாரங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன.மலம் அள்ளுதல்: காலனியத்தின் விளைவு பொதுவாக, அருந்ததியரை மலம் அள்ளும் சாதியாகவே காணும் போக்கு மேலோங்கி இருந்து வருகிறது; இது முற்றிலும் தவறான பார்வை.
மிருகங்களின் தோல் மூலம் தோல்பொருட்கள் உற்பத்தி செய்வதில் கூரறிவு கொண்ட அருந்ததியர் பெரும் பாலான தமிழகக் கிராமங்களில் வசித்து வருகின்றனர். விவசாய உற்பத்திக்கு கிணற்றிலிருந்து நீர்ப் பாய்ச்சத் தேவையான தோலினாலான கமலை அருந்ததியராலேயே தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால், காலனிய ஆட்சியாளர்களால் புகுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பமான இயந்திரமுறை, ஒருபுறம் கமலை முறையை அப்புறப்படுத்தியது, மற்றொருபுறம் அதனை உற்பத்தி செய்துவந்த அருந்ததியருக்கும் கிராமத்திற்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது. இவ்விரிசல் அருந்ததியர் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வேறு தொழில்களைத் தேடி நகரங்களுக்கு குடிபெயர வேண்டிய சூழலை உண்டுபண்ணியது.இனி, அருந்ததியர் வாழ்வில் காலனியம் ஏற்படுத் திய பாதகமானச் செயலினைக் காண்போம்.
மலம் கழிப்பதற்கென கழிப்பறை முறையானது நகரங்களில் வசிக்கத் தொடங்கிய காலனிய ஆட்சிளார்களால் அறிமுகம் செய்யப்பட்டது. இது மெதுவாக கிராமங்களுக்கும் பரவத் தொடங்கியது. மேல்சாதியினர் குறிப்பாக மேல்சாதிப் பெண்கள் கழிப் பறையை பயன்படுத்தினர். இந்த கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கென அருந்ததியர் நிர்ப்பந்தப் படுத்தப்பட்டதாக வாய்மொழி வரலாறு தெரிவிக்கிறது. எனவே விவசாயத்தில் நீர்ப் பாய்ச்சுவதற் கென காலனியம் புகுத்திய நவீன தொழில்நுட்பம், கழிப்பறையின் அறிமுகம் ஆகியன மலம் அள்ளும் பணியை அருந்ததியர்மீது திணித்தது என கருதலாம். இது குறித்த வரலாற்று ஆய்வுகள் தவிர்க்க இயலாத தேவையாக உள்ளது. இவ்விடத்தில், அருந்ததியரின் குலத்தொழில் ‘’மலம் அள்ளுதல்’’ என்ற வரலாறு தவறானது என்று முடிவு செய்யலாம். அருந்ததிய மகா சபாவிலங்கின் தோல் மூலம் தோல்பொருட்கள் தயாரிப்பது மேல்சாதி இந்துக்களால் தீட்டாகவே கருதப்பட்டு வந்தது. இதனால் அத்தொழிலில் ஈடுபட்டு வந்த அருந்த தியர் தீண்டாமைக்குள்ளாயினர். மேலும் காலனியத் தால் அவர்கள் மலம் அள்ளுவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டபோது தலித்துகளிலும் தலித்துகள் ஆனர். ‘அருந்ததியர் தலித்துகளிலும் தலித்துகள்’ என்னும் சொற்றொடரே அம்மக்கள் சாதிய சமூகத்தில் அனுபவித்த அல்லது அனுபவித்துவரும் ஒடுக்குமுறையை விளக்குவதற்குப் போதுமானதாகும். இதனை மேலும் விரிவாக எடுத்துரைக்க வேண்டிய அவசியம் இவ்விடத்தில் இல்லை. பல்வேறு சமூக ஒடுக்குமுறைகளிலிருந்து அருந்ததியரை விடுவிப்பதற்கென 1921ல் அருந்ததிய மகாசபா என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.எம்.ஆர்.ஆர்.ஒய்.ராவ் சாகிப் எல்.சி. குருசாமி இதன் தலைவராகவும், எச்.எம். ஜெகநாதம் செயலாளராகவும் செயல்பட்டனர். இவ்விரு வரும் சென்னை மாகாண அவை உறுப்பினர்களாகவும் பொறுப்பு வகித்தனர். இப்பொறுப்பினை அருந்ததியர் மற்றும் இதர ஒதுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குப் போராடும் களமாக பயன்படுத்திக் கொண்டனர்.

இவ்வியக்கம் எங்கெல்லாம் பரவியிருந்தது? எத்தனை மாநாடுகள் நடத்தப்பட்டன? என்னென்ன தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன? என்ற கேள்விகள் எழுகின்றன. ஆரம்ப காலங்களில் சென்னை நகரப்பகுதிகளில் மட்டும் இவ்வியக்கம் செயல்பட்டிருக்கிறது. இதர பகுதிகளில் வசித்து வந்த அருந்ததியர்
களை இவ்வியக்கம் அணி திரட்டியிருக்கவில்லை. சபாவின் தலைவர்கள் சென்னை மாகாண அவையில் உறுப்பினர்களாக இருந்ததால் அவர் களால் சென்னையில் மட்டுமே செயல்பட முடிந்திருக்கிறது என்று ஊகிக்கலாம். ஆனால், சபா அருந்ததிய மக்களுக்கு கல்வி அளிப்பதில் முனைப்புடன் செயல்பட்டிருக்கிறது. ஒன்பதாண்டு கல்விப் பணிஒதுக்கப்பட்ட சமூகங்களின் தலைவர்கள் தங்கள் சமூக மக்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக எடுத்துக் கொண்ட முயற்சியைப்போல், குருசாமியும், ஜெகந்நாத மும் அருந்ததியர்கள் கல்வி கற்கவேண்டும் என்பதற்காக முனைப்புடன் செயல்பட்டனர். இவர்கள் அருந்ததியர் மகாசபா சார்பில், 1)மாதிகா இரவுப்பள்ளி, புளியந் தோப்பு, 2)மாதிகா (அருந்ததிய மகாசபா) இரவுப்பள்ளி, பெரம்பூர், 3) அருந்ததிய மகாசபா இரவுப்பள்ளி, சூலை, 4)மக்டூன் செரி•ப் தெரு இரவுப்பள்ளி, பெரியமேடு மற்றும் 5) அருந்ததிய மகாசபா பகல் பள்ளி, பெரம்பூர் ஆகிய ஐந்து பள்ளிகளை 1921ஆம் ஆண்டு தொடங்கி 1929ஆம் ஆண்டுவரை நடத்திவந்தனர்.குருசாமியே இப்பள்ளிகளை நிர்வகித்து வந்தார். ஆசியர்களுக்கான சம்பளம் உட்பட இதர செலவினங்களுக்கான நிதி தொழிலாளர்துறை சார்பில் பள்ளியின் தாளாளர் குருசாமி மூலம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவருக்கு எவ் விதமான சம்பளமும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சுமார் ஒன்பது ஆண்டுகளாக இவ்வைந்து பள்ளிகளையும் குருசாமியே தாளாளராக இருந்து நிர்வகித் வந்தா இச்சூழலில், காலனி ஆட்சியாளர்களின் கொள்கை நடவடிக்கையினால் இப்பள்ளிகளை தொடர்ந்து நடத்து வதில் சிக்கல் உருவானது.

மாதிகா இரவுப்பள்ளி, புளியந் தோப்பு மற்றும் மக்டூன் செரி•ப் தெரு இரவுப்பள்ளி, பெரியமேடு ஆகியவற்றைத் தொழிலாளர்துறை எடுத்துக்கொண்டது. மாதிகா (அருந்ததிய மகாசபா) இரவுப்பள்ளி, பெரம்பூர் மற்றும் அருந்ததிய மகாசபா பகல் பள்ளி, பெரம்பூர் ஆகியவற்றை குருசாமியே நிர்வ கித்து வந்தார். இந்நிலையில், கல்வித்துறை பரிந்துரையின் பேரில், தொழிலாளர்துறை இவ்விரு பள்ளிகளுக்கும் வழங்கிவந்த நிதியை நிறுத்திவிட்ட காரணத்தால் 5-வது பள்ளியான அருந்ததிய மகாசபா பகல் பள்ளியை இழுத்து மூடவேண்டிய நிலை ஏற்பட்டது.இரட்டிப்பு நிதி செலவினை தவிர்க்கும் பொருட்டு இந்த நிதி நிறுத்தப்பட்டதாக சென்னை மாநகராட்சியின் கல்வித் துறை அலுவலர் தெரிவித்தார். தொழிலார்துறை எடுத்துக்கொண்ட மற்றும் நிதி நிறுத்தப்பட்ட பள்ளியில் பயின்ற மாணவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், அருந்ததிய மகாசபாவின் தலைவருக்கு 1929ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ‘மாநகராட்சி அருந்ததிய மகாசபா பகல் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கொடுக்க இருக்கிறது. எனவே, இனிமேல், அருந்ததிய மகாசபா பகல் பள்ளிக்கு, நிதிஉதவி வழங்கப்பட மாட்டாது’ என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.அருந்ததிய மகாசபா பகல் பள்ளி மாணவர்களை மாநகராட்சி பள்ளிகளில் சேர்ப்பதை அருந்ததிய மகாசபா எதிர்த்தது. மேலும் தொழிலாளர்துறையின் நிதி உதவியின்றி, அருந்ததிய மகாசபாவே அதற்கான நிதியினைத் திரட்டி அப்பள்ளியை நடத்த வேண்டும் என தலைவர்கள் முடிவு செய்தனர். ஆனால் அவர்களால், போதிய நிதி ஆதார மின்றி அப்பள்ளியை நடத்த இயலாமற் போனது. இதே போல், மகாசபா இரவுப்பள்ளியை தொழிலாளர் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அத்துறை கோரியது. சபா இதனை மறுத்துவிட்டதால் இதற்கான நிதியும் நிறுத்தப்பட்டது. எனவே, இப்பள்ளியையும் இழுத்து மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. காலனிய ஆட்சியின் கல்வி மற்றும் தொழிலாளர் துறைகளின் நடவடிக்கைகளினால் அருந்ததியர்களை கற்க வைக்கும் அருந்ததியர் மகாசபாவின் இயக்கப் பணி முடக்கப்பட்டது.நிதி பிரச்னையினால் அருந்ததியர் பள்ளிகளுக்கு வழங்கி வந்த நிதியுதவியை காலனிய ஆட்சி நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவ்வுதவியை நிறுத்தியதால் அருந்ததிய சமூக இயக்கமே பெரும் சிக்கலுக்குள்ளானது. ஒன்பது ஆண்டுகளாய் ஐந்து பள்ளிகளை நிர்வகித்து வந்த சபா அதனைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்திருந்தால் அருந்ததிய மக்களுக்கான பல தலைவர்களை அப் பள்ளியிலிருந்தே உருவாக்கியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு நடைபெறாததால் அருந்ததியரின் சமூக விடு தலைக்கு இடையூறு ஏற்பட்டது. இருப்பினும், அருந்த தியர் மகாசபா இதர பணிகளையும் செய்திருக்கிறது.‘சக்கிலியன்’: இழிபெயருக்கெதிரான முதல்குரல்சமூக விடுதலைக்காகப் போராடும் சாதிய இயக்கங்கள் தங்களின் பெயர்களை மாற்றுவதென்பது அடிப்படை தேவையாய் இருக்கிறது என்பதை அம்பேத்கர் மற்றும் சாதி இயக்கங்கள் குறித்து ஆய்வு செய்த அறிஞர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். காலனிய ஆட்சிக்காலத்தில் தோன்றிய பல தலித் இயக்கங்கள் தங்களின் பெயரை மாற்ற முனைந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. மூத்தவன், பழமையானவன் என்ற பொருளைத் தரும் ‘ஆதி’, என்ற பெயரோடு இவர்கள் தங்களை அடையாளப் படுத்தியிருக்கின்றனர்.
அருந்ததியர் தங்களை சக்கிலியன் என்று அடையாளப் படுத்துவதை எதிர்த்தே வந்திருக்கின்றனர். பெயர் மாற்றம் தொடர்பாக 1922ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு அரசாணையின்படி பறையன், சக்கிலியன் போன்ற இழிவுப்பெயர்கள் பயன்படுத்தப்படுவதும் தடைசெய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் அரசாங்கமே சம்பந் தப்பட்ட மக்கள் வெறுத்தொதுக்கும் இழிபெயர்களாலேயே அவர்களைச் சுட்டியிருக்கிறது. இதற்கு எதிராக, சென்னை மாகாண அவை உறுப்பினர் பொறுப்பினை வகித்துவந்த தலித்துகள் குரலெழுப்பியுள்ளனர்.மேட்டுப்பாளையம் யூனியன் போர்டு, ‘’சக்கிலியன்’’ என்று குறிப்பிட்டதை எதிர்த்து ஆர்.வீரையன், 24 மார்ச்சு 1926 அன்று சென்னை மாகாண அவையில் கேள்வி எழுப்பினார் (இவர் ஆதிதிராவிடர்). ‘இழிவான பெயர் களால் சுட்டுவது தடை செய்யப்பட்ட பின்னரும், அது பயன்படுத்தப்படுவதை தொடர்ந்து நான் காண்கிறேன். அரசாங்கம் அத்தடையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்போகிறதா அல்லது இல்லையா என்பதை அறிய விரும்புகிறேன்’’ என்று வினவினார். இதற்கு உள்துறை அமைச்சரான பனகல் அரசர், ‘நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தினுடைய பணி அல்ல. அரசாங்கம் அவ் வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்பதை மட்டுமே தெரிவித்திருக்கிறது.பிறர் பயன்படுத்தினால், சம்பந்தப் பட்டவர்களே இதில் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று பதிலளித்தார். வீரையன், ‘இது எந்த தனிநபர்களும் பயன்படுத்தவில்லை. அப்பெயரை உள்ளூர் நிர்வாகமே அச்சிட்டிருக்கிறது’ என்றார். இதற்கு அவைத்தலைவர், ‘அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். பின்னர் வீரையன் அரசாங்க ஆவணங்களில் அத்தகைய பெயர் களை பயன்படுத்தப்படுவதை அரசு ஆணை தடை செய்கிறது என்றார். பனகல் அரசரோ, உள்ளூர் நிர்வாக அமைப்புகளின் பதிவேடுகள், அரசாங்கத்தின் பதிவேடு களல்ல என்றார்.அப்படியென்றால், உள்ளூர் நிர்வாகம் அரசாங்கத்தின் ஒருபகுதி இல்லையா? என்று வினவி னார் வீரையன். பனகல் அரசர், குறிப்பிட்ட நிகழ்வினை கவனத்திற்கு கொண்டுவந்தால் அரசாங்கம் உள்ளூர் நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் என்றார்.வீரையன், ‘இங்கு மேட்டுப்பாளையம் யூனியன் போர்டு குறிப்பிட்ட நிகழ்வாகும். அவர்கள் அவ்வார்த்தையை நோட்டீசில் அச்சடித்திருக்கின்றனர். இதனை, நான் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன்’’ என்றபோது, அந்த வார்த்தை உள்ள நோட்டீசை அரசாங்கத்திடம் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பனகல் அரசர் பதிலளித்தார். சக்கிலியன் என்று இழிவாக அழைப்பதற்கெதிரான முதல்குரலாக சென்னை மாகாண அவையில் ஆர்.வீரையன் எழுப்பிய கேள்வியே தென்படுகிறது. பெயர் மாற்றம்: அருந்ததியர் ஐயாகாரு அல்லது ஐயா அவர்கள்அருந்ததியர் என்ற பெயரினை அச்சமூகத் தலைவர்கள் எக்காலத்திலிருந்து பயன்படுத்தத் தொடங்கினர் என்பதை மிகச் சரியாகக் கணிக்க இயலவில்லை. இருப்பினும், அவர்களின் சமூக இயக்கத்திற்கு “அருந்ததியர் மகாசபா’’ என்ற பெயரினை சூட்டியதிலிருந்து இப் பெயர் 1920களில் புழக்கத்திற்கு வந்திருக்கிறது என ஊகிக்கலாம். மேலும், இப்பெயரினை எல்.சி.குருசாமியும், எச்.எம்.ஜெகந்நாதமும் சமூகத்திற்கு அறிமுகம் செய்திருக்கலாம். ஏன் இப்பெயரை அவர்கள் தெரிவு செய்தார்கள்?, இதற்கான கருத்தியல் பின்புலத்தை எவ்வாறு பெற்றுக் கொண்டார்கள் என்பது குறித்த விவரங்களும் தெரியவில்லை. ஆனால் அவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலம்தொட்டே, அருந்ததியர் என்ற பெயரால்தான் தாங்கள் அழைக்கப்பட வேண்டும் என்பதற்காக அச்சமூகத்தின் தலைவர்கள் போராடியிருக்கின்றனர்.காலனி ஆட்சியாளர்கள் சாதிரீதியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தினர். ஆரம்பகாலங்களில் அருந்ததியரை பறையரோடு இணைத்து கணக்கெடுத்தனர். ஆனால் வெகுவிரைவில் அவ்வாறு செய்தது தவறு என்று உணர்ந்தனர்.
‘மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 130,386 மாதிகா. அதாவது சக்கலர் (சக்கிலியர்) பறையர்களோடு இணைக்கப்பட்டு இருந்திருக்கின்றனர். நிச்சயமாக இது தவறு, இவ்விரண்டு வகுப்பினரும் முழுமையாக வேறுபட்டவர்கள்’ என்று கோவை மாவட்டக் கையேட்டில் காணப்படும் மேற்குறிப்பிட்ட வாக்கியமே இதற்கு சாட்சி. ஆனால் பின்னர் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் கோவை, சேலம், செங்கற்பட்டு போன்ற மாவட்டங்களில் சக்கிலியன் மற்றும் மாதிகா என்றும், திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், நீலகிரி போன்ற மாவட்டங்களில் சக்கிலியன் என்றும் குறிக்கப் பெற்றிருக்கின்றனர்.மேலும் அவர்கள் தெலுங்கு மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் (depressed Clas) என்று வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். ஆனால் 1931 கணக்கெடுப்பின்போது, கோவை, சேலம், செங்கற்பட்டு, வடஆற்காடு ஆகிய மாவட்டங்கள் உட்பட சென்னை மாகாணத்தில் 17,396 பேர் சக்கிலியன், மாதிகா போன்ற பெயர்களை புறக்கணித்துவிட்டு அருந்ததியர் என்ற பெயரிலேயே தங்களை பதிவு செய்திருக்கின்றனர். இப்பெயர் மாற்றம் அருந்ததியர் இயக்கத்தின் செயல்பாடு இல்லாமல் நிகழ்ந்திருக்க இயலாது. எனவே, அருந்ததி யர் மகாசபா கல்விப் பணியிலிருந்து முடக்கப்பட்ட போதிலும் அவ்வியக்கம் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டும் தனது மக்களை அணிதிரட்டிக் கொண்டும் இருந்திருக்கிறது என்பதனை அறியலாம்.பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் தங்களை அருந்ததியர் என்ற அடையாளத்திற்குள் கொண்டுவந்து விட வேண்டும் என்பதற்காக தொடர் போராட்டத்தையே நடத்தியிருக்கின்றனர். எச்.எம்.ஜெகநாதம், 5 ஆகஸ்டு 1932ல் சென்னை மாகாண அவையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தார். ‘தற்போது மாதிகா, சக்கிலி யன், மாதாங்கா, கோசாங்கி, ஆதி-ஜம்புவா (கொம்மு, சின்டு, மாஸ்டிங்கு உட்பட) ஆகியோரை ‘அருந்ததியர் ஐயாகாரு அல்லது ஐயா அவர்கள்’ என்றே அரசாங்க பதிவேடுகளில் குறிக்கவேண்டும்’ என்பதே அத்தீர்மானம். தெலுங்கு சொல்லான காரு தமிழில் அவர்கள் என்ற மதிப்பிற்குரிய சொல்லிற்கு இணையானதாகும். இத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக அவர் சில காரணங்களையும் அவையில் விளக்கினார். அதன் சுருக்கத்தை இங்கு காணலாம்:பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் வாழ்ந்து வரும் அருந்ததிய மக்கள் வேறுபடுத்த இயலாத ஒரே மக்கள் ஆவர். அவர்கள் ஒரே மொழியை பேசுகின்றனர். ஒரே கடவுளை வணங்குகின்றனர். திருமணம் மற்றும் இறப்புச்சடங்குகள் ஒன்றாகவே இருக்கிறது. ஒருவருக் கொருவர் கலப்பு மணம் புரிந்து கொள்கின்றனர். எல்லா வற்றிக்கும் மேலாக அவர்கள் பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒரே தொழிலையே செய்து வருகின்றனர். எந்தச்சூழலும் அவர்களை ஒருவரிடத்திலிருந்து மற்றொ ருவரை பிரிக்கவில்லை. அருந்ததியர் என்று அழைப்பதனால் எற்படும் பலன்களையும் விவரித்தார். முதலில் அம்மக்களிடையே ஒற்றுமை உருவாகும். இரண்டாவது, அருந்ததியரின் குறைகளை போக்குவதற்கு அம்மக்கள் முயற்சிப்பதற்கு பெரும் வழிவகுக்கும் என்றார். மேலும் அருந்ததியர் என்பதே அம்மக்களின் உண்மையான பெயர் என்றார். தீர்மானத்தை ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவரும் சென்னை மாகாண அவை உறுப்பினரு மான வி.ஐ.முனுசாமி பிள்ளை ஆதரித்து வழி மொழிந்து பேசினார். இதற்கு சட்ட உறுப்பினர் எம். கிருஷ்ணன் நாயர், அனைத்து பழைய அரசு பதிவேடுகளில் புதிய பெயரை சேர்க்க இயலாது என்று பதிலளித்தார். ஜெகந்நாதம் இனிவரும் காலங்களில் அருந்ததியர் என்ற பெயரை சேர்க்கவேண்டும் எனக் கோரினார். ஆர். மதன கோபால் நாயுடு என்ற உறுப்பினர், பறையர் என்ற பெயர் எவ்வாறு ஆதிதிராவிடர் என்று மாற்றப்பட்டதோ, அதே போல் சக்கிலியன், மாதிகா ஆகிய பெயர்களை அருந்ததியர் என்று மாற்றவேண்டுமென ஜெகந்நாதம் கோருகிறார் என்றார்.இதற்கு கிருஷ்ணன் நாயர், அவர்கள் தங்களை அருந்ததியர் என்று அழைத்துக் கொண்டால் அரசாங்கமும் அவ்வாறே அழைக்கும். இந்த உத்தரவா தத்தை மட்டுமே தரமுடியும் என்றார். அதனைத் தொடர்ந்து இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் அரசு பதிவேடுகள், நூல்கள் போன்றவற்றில் அருந்ததியர் என்ற பெயர் இடம் பெற்றிருக்கிறது. சக்கிலியன், மாதிகா போன்ற பெயர்களையும் காணமுடிகிறது. மலம் அள்ளுவதற்கு எதிரான போராட்டம்காலனி ஆட்சிக் காலத்திலிருந்து அருந்ததியர்கள் மலம் அள்ளுதல் என்னும் இழிதொழிலுக்குள் புகுத்தப்பட்டி ருக்கின்றனர் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அருந்ததிய மகாசபா, ‘மலம் அள்ளாதே’ என்று போராடி யதாகத் தெரியவில்லை. இருப்பினும் அருந்ததியர் உட்பட இதர தலித் குற்றவாளிகள் மற்றும் தண்டனைக் கைதிகள் சிறைக்குள் மலம் அள்ளுவதற்கு நிர்ப்பந்திக்கப் படுவதை எதிர்த்து சென்னை மாகாண அவையில் தலித் உறுப்பினர்கள் போராடியிருக்கின்றனர். ‘சிறைச்சாலைக்குள் கைதிகள் அறையிலிருக்கும் கைதிகளே அவர்களின் மலத்தையும் சிறுநீரையும் அப்புறப்படுத்திவிடுவதாக நான் அறிகிறேன். அவ்வாறிருக்கும்போது மலம் அள்ளுவதற்கென்று ஏன் ஒரு சிறப்பு வகுப்பை நியமிக்க வேண்டும்’’ என்று ஆர். வீரையன் 17 டிசம்பர் 1925ல் வினவினார்.இதற்கு பதிலளித்த உள்துறை உறுப்பினர், சில சிறைகளில் சம்பந்தப்பட்ட கைதிகளே அவர்களின் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சில சிறைகளில் அவ்வாறு செய்ய முடிய வில்லை என்றார். சிறைக் கையேடு மலம் அள்ளுவதற்கு அதற்குரிய வகுப்பாரை நியமிக்க வேண்டும், அவர்கள் இல்லாத பட்சத்தில் இதர ஒதுக்கப்பட்ட வகுப்புகளை அப்பணிக்கு அமர்த்தவேண்டும் என்று குறிப்பிடுகிறதா என்று வீரையன் கேள்வி எழுப்பினார். இதற்கு, பொதுவாக (சிறைக்கு) வெளியே யார் இப்பணியைச் செய்கிறார்களோ அவர்களே சிறையிலும் அப்பணியை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று உள்துறை உறுப்பினர் பதிலளித்தார். இ.கக்கன், ஜே.சிவசண்முகம் பிள்ளை ஆகியோரும் அருந்ததியர் உட்பட இதர தலித் சிறைக்கைதிகள் சிறைக்குள் மலம் அள்ளுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுவதை எதிர்த்து சென்னை மாகாண அவைக்குள் போராடியுள்ளனர்.இவ்விடத்தில் நம் விவாதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதானது, சிறைக்குள் கைதிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்ததாகும். சிறையில் ஒரு பணியைச் செய்வதற்கான அளவுகோல் என்ன? அது ஒரு கைதி செய்த குற்றத்தின் தன்மையைப் பொறுத்ததா? அல்லது அவர் பிறந்த சாதியைப் பொறுத்ததா?. சென்னை மாகாண அவைக்குள் தலித் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான பதில், சிறைக்குள் ஒரு பணியைச் செய்வதற்கான அளவுகோல் கைதிகள் செய்த குற்றத்தின் தன்மையைப் பொறுத்தது அல்ல; மாறாக கைதிகள் பிறந்த சாதியைப் பொறுத்ததே என்பதனை தெளிவாக்குகிறது.
தலித் அல்லாத ஒருவர் மிகக் கொடூரமான குற்றத்தை செய்ததற்காக தண்டனை பெற்றிருந்தாலும் அவரின் மலத்தை அப்புறப்படுத்துவதற்கு ஒரு தலித் குற்றவாளி நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்.ஒரு தலித் சிறிய அல்லது கொடூரமான குற்றம் செய்தால் அல்லது அவர் குற்றமே செய்யாமல் சிறைத்தண்டனை அனுபவிக்க நேர்ந்தால் அவர் சிறைத் தண்டனையோடு பிறரின் மலத்தையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற தண்டனையும் அனுபவிக்க நேரிட்டுள்ளது. இத்தண்டனை எவ்வித விசாரணையுமின்றி அவர்மீது திணிக்கப்பட்டுள்ளது. இது தலித் ஒருவர் குற்றம் செய்தால் அவர் இரண்டு தண்டனையை அனுபவிக்கவேண்டிய சூழல் இருந்திருப்பதைக் காட்டுகிறது. ஒன்று, அவர் செய்த குற்றத் திற்காக இந்திய தண்டனைச் சட்டம் வழங்கும் தண்டனை; மற்றொன்று மநு(அ)தர்மச் சட்டம் அளித்திருக்கும் தண்டனை. முன்னதிலிருந்து விடுதலை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு; ஆனால் பின்னதிலிருந்து அதற்கான வாய்ப்புகள் ஒருபோதும் இல்லை. இந்த மநு(அ)தர்மச் சட்டத்தை காலனிய ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட சிறைக் கையேடு ஏற்றுக்கொண்டது என்பது கவனத்திற் கொள்ள வேண்டும். இப்பின்னணியில் தலித் உறுப்பினர்கள் சென்னை மாகாண அவைக்குள் எழுப்பிய கேள்விகளை நோக்கினால், அது சாதியின் பெயரால் தலித் குற்றவாளிகளுக்கு இரண்டு தண்டனை வழங்குவதை எதிர்த்தப் போராட்டம் என்பதனை புரிந்து கொள்ளலாம்.மலத்தை அப்புறப்படுத்தும் அருந்ததியர்கள் சென்னை மாநகரத்தில் அப்பணியை புறக்கணித்துவிட்டு வேலை நிறுத்தம் நடத்தயிருப்பதாக 1946ம் ஆண்டு அறிவித்தி ருக்கின்றனர்.இப்போராட்டத்திற்கான காரணம் என்ன என்பது மிகச் சரியாகக் கூறமுடியவில்லை. இருப்பினும், ஊதியம் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது. இப்போராட்டம் எந்த அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டது என்பதை அறிய இயலவில்லை. வேலைநிறுத்த அறிவிப்பு வெளியானதும் சென்னை மாநகரமே பதறியிருக்கிறது. குறிப்பாக சென்னை மாகாண அவை உறுப்பினர்கள் அதிர்ந்துவிட்டனர். கே.டி.கோசல்ராம், 2 ஆகஸ்ட் 1946ல், துப்புரவுத் தொழி லாளர்களின் வேலைநிறுத்தத்தை தடுப்பதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் தெரிவிக்க வேண்டும் என்றார்.

மாநகராட்சி அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்றார் அமைச்சர். எச்.எஸ்.குசைன் சாகிப் என்ற உறுப்பினர், இந்த வேலைநிறுத்தத்தினால் ஏற்படும் விளைவுகளை பொது சுகாதார அமைச்சர் அறிவாரா? என்று வினவினார். அதற்கு அமைச்சர் ‘ஆம். இந்த வேலைநிறுத்தத்தால் ஏற்படும் விளைவுகளை குறித்து அரசாங்கம் விழிப்புணர்வுடன்தான் இருக்கிறது. மாநகராட்சி ஆணையர் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்; இதனால் தீர்வு ஏற்படும்’ என்றார். வேலைநிறுத்தத்தை தடை செய்ய வேண்டும் என்பதில் கே.டி. கோசல்ராம் உட்பட இதர உறுப்பினர்கள் முனைப்புடன் இருந்திருக்கின்றனர் என்பது தெளிவு. ஆனால் தலித் உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்திற்கு எதிராக எந்த ஒரு கேள்வியையும் எழுப்ப வில்லை என்பது கவனத்திற் கொள்ள வேண்டிய செய்தி. இது, அருந்ததியர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தலித் உறுப்பினர்கள் ஆதரித்திருக்கின்றனர் என்பதையே சுட்டுகிறது. இவ்வேலைநிறுத்தமே காலனிய ஆட்சிக் காலத்தில் அருந்ததியர் நடத்திய முதல் போராட்டமாகக் கருதலாம். முடிவுரைஇக்கட்டுரையிலிருந்து சில முடிவுகளை தொகுத்துக் கூறலாம். முதலில், காலனியம் அறிமுகப்படுத்திய கழிப்பறை முறையினாலும், புதிய தொழில் நுட்பத்தாலும், தோல் தொழிலில் கூரறிவுத்திறன் கொண்டவர்களான அருந்ததியர் மலம் அள்ளும் இழிதொழில் செய்வதற்கு நிர்ப்பந்தப்படுத்தப்பட்டனர். இதனால் ஒடுக்குமுறைக்கும் ஒதுக்குமுறைக்கும் உள்ளான அம்மக்களை விடுவிப்பதற்காக கல்வியே அடிப்படையானது என்று எல்.சி. குருசாமியும், எச்.எம்.ஜெகந்நாதமும் அப்பணியைச் செய்திருக்கின்றனர். ஆனால், காலனிய ஆட்சியின் கொள்கை முடிவு ஒருபுறம், அப்பணியை முடக்கிவிட்டது, மற்றொருபுறம், அச்சமூகத்திலிருந்து தலைவர்கள் உருவாவதை தடுத்து அம்மக்களின் விடுதலைக்கும் முட்டுக்கட்டை போட்டுவிட்டது. இருப்பினும், இதர சிக்கல்மீது தங்களின் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினர். பல்வேறு பெயர்களிலும், பல்வேறு பகுதிகளிலும் ஒரே தொழில் செய்யும் தங்களை அருந்ததியர் என்று அழைக்கவேண்டும் என்ற பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்ட எச்.எம். ஜெகந்நாதம் வெற்றி கண்டார். இழிபெயர்களை புறக்கணித்துவிட்டு அருந்ததியர் என்ற பெயரைச் சூட்டிக் கொள்ளுதல், சிறையில் அருந்ததியர் உட்பட இதர தலித் குற்றவாளிகளை மலம் அள்ளுவதற்கு நிர்ப்பந்தித்தல் ஆகியவற்றை எதிர்த்த போராட்டத்தில் இதர தலித் தலைவர்களின், குறிப்பாக ஆதி-திராவிடர்களின் பங்கேற்பு வரலாற்றில் புறக்கணிக்க இயலாதது. (நன்றி- மா.வேலுசாமி )
 
 
அருந்ததியர் அவலமும் தூங்கா நகரின் துயரமும்
மதுரை, தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் ஒன்று. பல்வேறு மத, இன, மொழியாளர் கலந்து வாழும் நகரம். கோயில் நகரம் என்று தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மதுரைக்கு தூங்கா நகரம் என்ற சிறப்பும் உண்டு. பாண்டியர்கள், நாயக்கர்கள், முஸ்லிம்கள், ஆங்கி லேயரின் ஆட்சிக் காலங்களில் மதுரை முக்கிய இடம் பெற்றுள்ளது. எனினும், சமூக வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளும், தீண்டாமையும் அதன் கொடுமைகளும் மதுரையின் நெடுந் தொடரான காலபடித்தரத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது.
 

மதுரையின் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் நுழைய தீண் டத்தகாத சமூகத்தவர்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அந்த காலக்கட்டத்தில்   ஏ.வைத்தியநாத ஐயர், தலித் மக்களை வெற்றிகரமாக கோயிலுக்குள் வழிநடத்திச் சென்ற வர். இச்சம்பவம் நடைபெற்று 70 வருடங்கள் உருண்டோடிய பின்னரும் உண்மையான சமூக விடுதலை என்ப தும் தலித் சமூகத்திற்கு எட்டாக் கனியாக உள்ளது.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் தீண்டாமை இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பல தலைமுறைகளாக தொடரும் தீண்டாமை கொடுமை பற்றி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற அமைப்பு 21 தலித் குடியிருப்புகளை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றினை தயாரித்திருக்கிறது.

தலித்கள் தனிமைப்படுத்தப்பட் டுள்ள கிராமங்களில் இந்த பாகு பாட்டை அனுபவிக்கிறார்கள். இச் செயல் குறைந்தும் வருகிறது என்ற உண்மையை இந்த அறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

இந்தப் பிரச்சினையில் இடதுசாரி கள் தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிக்கும் ஆழ்ந்த மௌனம் சாதிப்பதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டுச் சொல்கிறது. இந்த ஆய்வறிக்கை 2009 டிசம்பர் 18&ம் தேதியில் வெளியானது.

ஆரோக்கியமின்மை (ஜீஷீஷீக்ஷீ லீமீணீறீtலீ) மட்டகரமான வாழ்க்கை முறை இவற்றால் மதுரை மாவட்ட தலித் மக்கள் சூழப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான குடியிருப்பு வசதிகள் கிடையாது. கல்விக்கான முறையான சூழல் கிடையாது, வேலை வாய்ப்புகள் கிடையாது, சுய வேலைவாய்ப்புக்கான நிதிவுதவிகள் பெற வழியில்லை, முதியோர் ஊதியம் உள்ளிட்ட நல உதவிகள் பெறுவதில் தாமதம் உள்ளிட்ட சிக்கல்கள் அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத் திற்கு பெரிய தடைகளாக உள்ளன என்கிறார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.சம்பத்.

முப்பது வருடங்களுக்கு மேலாக இந் நகரத்தில் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலப்பட்டா வழங்கவில்லை என்பது மற்றொரு பிரச்சினை சுடுகாடுகள் மற்றும் செருப்பு தைக்கும் சுகாதாரம் தொடர்பான பணியில் ஈடுபடும் அருந்தியர் அவலத்தையும் இந்த அறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

மதுரை மாநகரில் தலித்துக்கள் சந்திக்கும் மற்றுமொரு முக்கியப் பிரச்சினை குடியிருப்பு. மதுரையின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கு குறைவான விகிதத் தில் தலித்துக்கள் உள்ளனர். இவர்கள் அருள்தாஸ்புரம், செல்லூர், முனிசிலை, திடீர் நகர், சதாமங்கலம், அனுப்பானடி, வில்லாபுரம் உள்ளிட்ட 19 பெரிய தொகுப்பு சேரிகளில் வசிக்கின்றனர். இவை நகரத்தின் 72 நகர்மன்ற தொகுதிகளை உள்ளடக்கி யுள்ளன. இவைகளில் ஒரு தொகுதி நகர மேயரையும், துணைமேயரையும் தந்துள்ளது.

அருந்ததியர்கள் தெலுங்கு மொழி பேசுகின்றனர். இவர்கள், விஷ்வநாத நாயக்கரின் ஆட்சி காலத்தில் (16&ம் நூற்றாண்டு) மதுரைக்கு வந்துள்ளனர். மதுரையின் புறநகர் பகுதிகளில் தங்கியுள்ளனர். நாயக்கர்கள் காலத்தில் (16 மற்றும் 17&ம் நூற்றாண்டில்) மேலவாசல், கீழவாசல், தெற்கு வாசல், வடக்கு வாசல் ஆகிய நான்கு முக்கிய நகரின் நுழைவாயில்களுக்கு வெளியே தலித்துகள் வசித்துள்ளனர். பழங்கால வருவாய் பதிவேட்டில் “பள்ளர் மயானம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மயானம் பழங்காநத்தம் அருகே இருந்துள்ளது.

சேரிவாழ் மக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் சுகாதாரப் பணியில் (sணீஸீவீtணீக்ஷீஹ் ஷ்ஷீக்ஷீளீs) உள்ளனர். இவர்கள் அனைவரும் அருந்ததி சாதிப்பிரிவினர். சாதிப் பட்டியலில் ஆக கீழ்மட்டத்தில் இடம் பெற்றுள்ளனர். மற்றவர்கள் உடல் உழைப்பு செய்யும் தினக்கூலி தொழிலாளர்கள், குப்பை பொறுக்கு பவர்கள், பாதைசாரி வியாபாரிகள் (லீணீஷ்ளீமீக்ஷீs) சுமை தூக்குபவர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள்.

தலித்துகளின் வீதிகள் கூட சாதி வாரியாக வரையறுக்கப்பட்டுள்ளன. தத்தனேரி பகுதியில் தெருக்களுக்கு கூட பட்டியல் சாதியினரின் துணை பிரிவுகளின்¢ கீழ் பெயரிடப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமாக மாற்றுப் பெயர்கள் இடப்பட்டுள்ளபோதும், பொதுவிநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வழங்கியுள்ள குடும்பஅட்டைகளில் குறிப்பிடப் பட்டுள்ளபடி சில பொது வினியோக கடைகள் “ஹரிஜன் கூட்டுறவு நியாய விலை கடைகள்” என்று பெயரிடப் பட்டுள்ளன.

தலித்துகள், தங்கள் சொந்த சமூகத்தவர்களின் அண்டையிலேயே வசிக்க விரும்புகின்றனர். தங்கள் வாழ்விடங்களுக்கு வெளியே குடியேறுவது பாதுகாப்பாக இருக்காது என்று எண்ணுகின்றனர். நகர்ப்புற விரிவாக்கத் திட்டமும் இவர்களின் அச்ச உணர்வை போக்கவில்லை. இத்திட்டத்தினால் தலித்துகளுக்கு எந்தவித ஆதாயமும் இல்லை என்கிறார். தென்னிந்திய வரலாற்று பேரவையின் பொது செயலாளர் பி.எஸ்.சந்திரபாபு.

குடிநீர் வினியோக பற்றாக்குறை, மற்றும் சுகாதார வசதிகள் பற்றாகுறை, பெருகும் மக்கள் தொகை அடர்த்தி, உள்கட்டமைப்பு வசதியின்மை ஆகியவை இதர பிரச்சினைகள். நெருக்கடியான இந்த சேரிப்பகுதிகளில் தலித்துகள் பன்றிகள் மற்றும் நாய்களுடன் தான் வசிக்க வேண்டியுள்ளது. இந்த குடியிருப்புகள், தமிழ்நாடு சேரி பகுதிகள் (மேம்படுத்தல் மற்றும் சுத்தப்படுத்தல்) சட்டம் 1971 பிரிவு 3-&ன் கீழ் பொருந்திப்போகிறது.

அவை (1) எந்த வகையிலும், மனிதர்கள் வாழ்வதற்கு பொருத்த மற்றவை.

(2) இடிபாடுகள், அதிக நெருக்கடி, தவறான கட்டிட அமைப்புகள், தவறான குறுகலான வீதி அமைப்புகள், காற்றோட்ட வசதியில்லாமை, வெளிச் சமின்மை, சுகாதார வசதிகள் இல்லாமை, இக்காரணிகள் தனித்தோ, கூட்டாகவோ பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூக ஒழுக்கத்திற்கு கெடுதி யாக (பீமீtக்ஷீவீனீமீஸீtணீறீ) உள்ளது.

இந்த சேரிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் குறுகலான சந்து அமைப்புகளுடனும், 10/10 அடி அல்லது அதற்கும் குறைவாக அளவு கொண்ட ஒற்றை அறை கொண்டதாகவும் இருக்கிறது. தலித்மக்கள் அதிலும் குறிப்பாக அருந்தியினர் இடப்பற்றாக்குறை காரணமாக கூட்டு குடும்ப முறைப்படி வாழ வேண்டிய நிர்பந்தம் உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 10 தலித்துகள் வசித்து வருகின்றனர்.

குடியிருப்பு வசதிகள் போதாமை காரணத்தால் தாழ்த்தப்பட்டோர் அல்லாத சேரிவாழ் மக்களும் துயர் அடைகின்றனர். சேரிகளுக்கு வெளியே தாழ்த்தப்பட்டோர் குடி யேறுவதில் மற்றுமோர் சிக்கல் உள்ளது. தலித் அல்லாத மக்கள் தலித்துகளுக்கு வீடு விற்கவோ, வாடகைக்கு தரவோ மறுக்கின்றனர். சொத்து வர்த்தகத்தின் (ஸிமீணீறீ ணிstணீtமீ) காரணமாக நிலமதிப்பு தாறுமாறாக எகிறியிருப்பதால் தலித்துகள் நன்கு தரமான வீடு களை வாங்க முடிவதில்லை. அவர்களது குடியிருப்புகளின் சந்தை மதிப்பு அடுத்துள்ள தலித் அல்லாதவர்களின் குடியிருப்புகளின் சந்தை மதிப்புக்கு இணையாக இல்லை என்கிறார். அனைந்திந்திய காப்பீட்டு தொழிலாளர் கழகத்தின் தென் மண்டல பிரிவின் பொதுச் செயலாளர் கே. சுவாமிநாதன்.

மஞ்சள் மேடு, மேல பொன்னகரம், மினிகாலனி, சுப்ரமணியபுரம், கீழ் மதுரை, அனுப்பாமை, கரும்பாலை, விராட்டிபத்து மற்றும் அரசரடி பகுதிகளில் உள்ள தலித்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட ஒருங் கிணைப்பாளரும், மதுரை முனி சிப்பல் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர் ஒன்றியத்தின் பொதுச் செயலாருமான ஆர்.ராஜகோபால்.

கரும்பாலை சேரியில் 2000 வீடுகள் இருக்கின்றன. ஒரு சில வீடுகள் தவிர மற்றவற்றிக்கு பட்டா வழங்கப்படவில்லை. 30 வருடங் களுக்கு மேலாகவே அவர்கள் அங்கு வசித்து வருகிறார்கள். கழிவு நீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள போதும் தனித்தனியாக வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படாத காரணத்தால் சாக் கடை நீக்கம் திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கடன்களை முறையாக செலுத்தாத காரணத்தால் சேரி ஒழிப்பு வாரிய அதிகாரிகள் இன்றும் பட்டா வழங்காமல் உள்ளனர்.

கோமேஸ்பாளையம் பகுதியில் இருந்து துணைமேயர் வந்திருக்கிறார். எனினும் மற்ற சேரிப்பகுதிகளில் இன்னும் முன்னேற்றம் எதுவும் அடைந்திடவில்லை. மாநகராட்சி கழிவறைகளை கட்டிவந்த போதிலும், தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் கட்டிட பணிகளை நிறுத்தியுள்ளது. அதிகாலை 5 மணி முதல் 7 மணிக்குள் குடிநீர் வரத்து நின்றுவிடும். திறந்த வெளி சாக்கடைகள் காரணமாக எப்பொழுதும் வீட்டை சுற்றிலும் சகதி கள் காணப்படும்.

சேரி ஒழிப்பு வாரியம் (slum clearence board) தங்களுக்கு புதிதாக வீடுகள் கட்டி கொடுக்கும் என்பதில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். திடீர் நகரில் தலித்துகளை குடியமர்த்த 240 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை ஒதுக்கீடு செய்வதிலும் குழப்பம் நிலவுகிறது. திடீர் நகரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு வில்லாபுரத்தில் தற்காலிக தங்குமிடம் வழங்கப்பட்டிருக்கிறது. கிருதம்மாள் நதிக்கு அருகில் உள்ளது கீராநகர். மேலவாசல் பகுதியில் உள்ள பெரிய கழிவு நீர்கால்வாய் பயங்கரமானது. இந்த கால்வாயின் மற்றொரு புரம் நகர்புற கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதன் துர்நாற்றங்களை (stக்ஷீமீநீலீ) சகித்துக் கொள்வதை தவிர இங்கு வசிப்போருக்கு வேறு வழியில்லை. வெள்ளப்பெருக்கை தடுக்க கால்வாய் ஒட்டி சுவர் எழுப்பும் திட்டத்தை அதிகாரிகள் இன்னும் தொடங்கவே இல்லை. இந்த வார்டின் ஒரு பகுதியான சுப்ரமணியபுரம். மேயர் இப்பகுதியில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் இதன் நிலைமையும் மிக மோசமாக இருக்கிறது. இங்கு 450 வீடுகள் பட்டாவுக்காக காத்திருக்கின்றன.

மதுரை முனிசிபல் மாநகராட்சி காலனியில் 1500&க்கும் மேலான மக்கள் வசிக்கின்றனர். சுகாதாரப் பணியாளர் களுக்காக மிகச்சிறிய பகுதியில் 90 வீடுகள் மட்டும் கட்டப்பட்டுள்ளன. தண்டல்காரன்பட்டி சேரிப்பகுதியில் திறந்தவெளி கழிவு நீர் கால்வாயும், அழுகிய வீண் பொருள்களின் குவியல்களும் இங்குள்ள வாழ்க்கைச் சூழலை சிக்கலுக்குள்ளாக்குகிறது.

நகர்மயமாதலில் 15 பெரிய மாநிலங்களில் தமிழ்நாடுதான் முதலிடம் வசிக்கிறது. சரிகாணப்படாத, தீவிரமான நகர்மயமாக்குதலால் மாசு படுதல், உபகரணங்கள், இடங்கள் தேவைப்படுவதன் சவால்களை மாநகராட்சி நிர்வாகம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்கின்றனர் நிபுணர் கள்.    மதுரையின் நகர்மயமாதலின் எதிர்விளைவுகளை தலித்கள் மற்றும் பொதுவான சேரிவாழ் மக்கள் சுமக்க வேண்டியுள்ளது.

தினந்தோறும் மதுரையில் 450 டன்கள் கழிவு பொருட்கள் சேகரமாகின்றன.  

தலித் அல்லாதவர்கள் சுகாதாரப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு அலுவலக உதவி யாளர்கள் போன்ற பணிகள் கொடுக்கப் படுகின்றன. சில டீ கடைகளில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி குவளைகளில் (ஜீறீணீstவீநீ நீuஜீs) சுகாதாரப் பணியாளர்களுக்கு டீ கொடுக்கப்படுகின்றது என்று குற்றம் சாட்டுகிறார் ராஜகோபால்.

தலித்துகளுக்கு கடன்கள் மற்றும் நிதியுதவிகள் வழங்க தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடிமனை மற்றும் மேம்பாட்டு கழகம் பல்வேறு முன்நிபந்தனைகளை விதிப்பதன் காரணமாக அம்மக்கள் தனியார் கடன் தருவோரிடம் செல்ல நேர்கிறது. அவர்கள் அதிகளவு வட்டி வசூலிக்கின்றனர். கடனை திருப்பிச் செலுத்தாத போது தலித் பெண்கள் துன்பத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். வட்டிக்காரர் களின் கரங்களில் சிக்கிபாலியல் தொந்தரவுக்கும் ஆளாகின்றனர். தலித்களின் நலன்களை மேம்படுத்த செயல்படுத்தப் படும் திட்டங்களை சரியாக கண் காணிக்க வேண்டும் அவர்களது வசிப்பிடங்களின் உள்கட்டு மானங் களை மேம்படுத்த வேண்டும் என்கிறார் ராஜகோபால்.

தலித்துகளின் மிக முக்கியமான மற்றுமொரு பிரச்சினை கல்வி. படிப்பை பாதியில் நிறுத்தும் தலித் சமூக குழந்தைகள் எண்ணிக்கை அதிகம். இதுவே அருந்ததியர் சமூகத்தில் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகும். அவர்களது பெற்றோர்கள் இடையறாது பணிக்கு செல்வதே காரணம். 96 சதவீத அருந்ததியின் குழந்தை கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கப்படுவதாக அன்னை தெரஸா கிராமப்புற வளர்ச்சி அறக்கட்டளை (கிஜிஸிஞிஜி) மேற்கண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த எண்ணிக்கை ஐந்தாம் வகுப்பில் 60 சதவீதமாகவும், எட்டாம் வகுப்பில் 45 சதவீதமாகவும் குறைகிறது. 20சதவீதத்திற்கு மேல் அருந்ததியர் குழந்தைகள் பத்தாம் வகுப்பை தாண்டுவதில்லை. மிகச் சிறிய அளவு சதவீதத்தினரே இந்த சமூகத்தில் மேற்கொண்டு படிக்கின் றனர். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிக்குப் போகின்றனர். குடும்பத்தில் வருவாய் ஈட்டுவோரின் திடீர் மரணமும் அக்குழந்தைகள் உடனடியாக படிப்பை கைவிட நேர்கிறது.

அருந்ததி சமூகத்தினர் தினப் பணிகளுக்காக அதிகாலை 5 மணிக்கே வீட்டைவிட்டு செல்ல நேர்வதால் தங்கள் குழந்தைகளின் கல்வி விசயத்தில் அக்கறை காட்ட முடிவதில்லை. இதன் காரணமாகவே, சுகாதாரப்பணியாளர்களுக்கு ஷிப்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெற்றோர்களில் ஒருவர் வீட்டில் இருந்து குழந்தைகளின் கல்வியை கவனிக்க முடியும்.

பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றாலும் பெரிய அளவில் நிதி தேவைப்படுவதால் அருந்ததியர் பிள்ளைகள் கல்லூரி வாசல்களை தாண்ட முடிவதில்லை. குறிப்பாக தனியார் கல்லூரிகளில் அவர்களால் சேர முடிவதில்லை. மதுரை மாநகரின் தலித் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தொடர்ச்சியான பிரச்சாரங்களை நடத்த இருக்கிறது. இந்த சமூகத்தின் மாணவர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு அருகில் பயிற்சி முகாம் களை நடத்த இருக்கிறது.

தொடர்ந்து 5 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு, இழிவுக்கு ஆளாக்கப்பட்டுள்ள சமூகத்தை மேம்படுத்த அனைத்து சமூகத்தினரும் அக்கறை காட்ட வேண்டும். அரசும் பாரபட்சமற்ற வகையில் அருந்ததியினர் சமூக மேம்பாட்டுக்கு ஆவண செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment